அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிக மோசமான கடன் நெருக்கடிக்கு இலங்கை தள்ளப்படும் – சம்பிக்க எச்சரிக்கை

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிக மோசமான கடன் நெருக்கடிக்கு இலங்கை தள்ளப்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

வெளிநாடுகளுடன் டொலர்களில் செய்யும் கணக்கு வழக்குகளை மூன்றுமாத காலத்திற்கு நிறுத்துமாறு சகல வங்கிகளுக்கும் மத்திய வங்கி அறிவித்தல் ஒன்றினை வழங்கியுள்ளது. ஏனென்றால் வெளிநாடுகளிடம் டொலர்களில் பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்தவேண்டிய நிலையில் கடந்த ஆண்டில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 எனவே நாட்டிலுள்ள சகல வங்கிகளில் இருந்தும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுத்தருமாறு மத்தியவங்கி தெரிவித்திருந்தது. இது நூறுக்கு 1 வீத வட்டிவீதத்தில் தருமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்தவொரு வங்கியும் 1 வீத வட்டிக்கு பணத்தை வழங்க முன்வரவில்லை. அதனால்  44 மில்லியன் அமெரிக்க டொலர்களையே அரசாங்கத்தினால்  பெற்றுக்கொள்ள முடிந்தது. எனவே செலுத்த வேண்டிய சர்வதேசக் கடனுக்காக  இறக்குமதிக்காக வைத்திருந்த பணத்தில் இந்த கடன்களை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டது.

அதேபோல் ரூபாவின் விலை வீழ்ச்சி கண்டதன் காரணமாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி ரூபாவின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டியதாகிவிட்டது. மத்திய வங்கியினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை சந்தைக்கு கொடுத்ததன் மூலமாகவே இப்போது ரூபாவின் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணமெல்லாம் நல்லாட்சி அரசாங்கத்தில் சேமிக்கப்பட்ட பணம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. இவ்வாறான பயணத்தை முன்னெடுத்து நாட்டினை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது. அரசாங்கத்திற்கு மிக நெருக்கடியான நிலைமையே இன்று காணப்படுகின்றது. ஆனால் அரசாங்கத்தில் உள்ள எவருக்கும் இந்த பிரச்சினைகள் விளங்கவில்லை என்றார். 

சீனிக்கு வரி குறைப்பு செய்ததன் மூலமாக 10 பில்லியன் ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க 8 பில்லியன் ரூபாயே தேவைப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வரி குறைப்பு மூலமாக அதனைவிட அதிகளவான தொகையை அரசாங்கம் கொள்ளையடித்துள்ளது. 

இந்த அரசாங்கம் 2020 ஆம் ஆண்டில் 660 பில்லியன் ரூபா பணத்தை அச்சடித்துள்ளது. ஆனால் எமது ஆட்சிக்காலத்தில்  நான்கு பில்லியன் ரூபாவை மாத்திரமே அச்சடித்தோம். இப்போது அரச வருமானம் 1,300 பில்லியன் ரூபாவாகும். இதில் முக்கால்வாசி புதிதாக அச்சடிக்கப்பட்ட பணமாகும். இதன் காரணமாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. எனவே  அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிக மோசமான கடன் நெருக்கடியில் நாம் தள்ளப்படுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.