கொழும்பு கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க நாங்கள் தயாரில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்

கொழும்பு கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுக்க நல்லாட்சியில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபோதிலும் அதனை நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம், கொழும்பு கிழக்கு முனையத்தை முழுமையாகவோ அல்லது பகுதி அளவில் கூட சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்க எமது அரசாங்கம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

 

 

இலங்கையின் கையை மீறி வேறு எவருக்கும் துறைமுகத்தை கொடுக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவும் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தில், கொழும்பு துறைமுகம் தொடர்பிலும், துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் சர்வதேச நாடுகளுடன் ஏதேனும் ஒப்பந்தங்கள் செய்யப்படவுள்ளதா எனவும், கிழக்கு முனையத்தை முழுமையாகவோ அல்லது, ஒரு பகுதியையேனும் சர்வதேச நிறுவனத்திற்கு கொடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா, ஏன் இலங்கையினால் இதனை முன்னெடுக்க முடியாதுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக பிரதமரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,

கடந்த 2005-2015 ஆட்சிக் காலத்தில் கொழும்பு தெற்கு முனையத்தின் அபிவிருத்தியை முன்னெடுத்தோம். அரச – தனியார் முறைமையின் கீழ் 35 ஆண்டுகால ஒபந்தம் செய்யப்பட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதேபோல் கிழக்கு முனைய அபிவிருத்தியும், தெற்கு முனைய அபிவிருத்தியையும் தற்போது எமது ஆட்சியில் முன்னெடுத்து வருகின்றோம். எவ்வாறு இருப்பினும் கொழும்பு துறைமுகம் எமக்கு மிக முக்கிய கேந்திர நிலையமாகும். எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கொழும்பு கிழக்கு முனைய அபிவிருத்தி குறித்து 2017 ஆம் ஆண்டில் இந்தியாவுடனும், 2019 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் இரண்டு உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்பட்டது. அதன் பின்னர் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. எவ்வாறு இருப்பினும் கொழும்பு கிழக்கு முனையத்தை முழுமையாகவோ அல்லது பகுதி அளவில் கூட சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்க எமது அரசாங்கம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்றார்.

இது குறித்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரான ரோஹித அபேகுணவர்தன கூறுகையில்,

முன்னைய ஆட்சியில் துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில்  துறைமுக அதிகார சபைக்கு தெரியாது அப்போதைய  அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இந்தியாவுடனும் ஜப்பானுடனும் உடன்படிக்கை ஒன்றினை செய்துகொண்டார். ஒரு உடன்படிக்கை ஒப்பந்தம் செய்துகொள்ளும் காலமும் முடியும். காலமும் இருக்க வேண்டும், ஆனால் இந்த உடன்படிக்கையில் அவ்வாறு முடிவொன்று இல்லை என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

நாமும் அவ்வாறான தவறுகளை நிவர்த்தி செய்து அபிவிருத்தியை இலக்காக கொண்டு நடைமுறைப்படுத்தி வருகின்றோம். கிழக்கு முனையம் 1,320 மீட்டர் நீளம் கொண்டது, அதில் 400 மீட்டர்களே அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இதனை முழுமைப்படுத்த 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை, அதனை 2,022 ஆம் ஆண்டுக்குள் செய்து முடிக்கவும் வேண்டும். இல்லையேல் எமது துறைமுகம் பலவீனமடையும். எனவே முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். நாம் கடன்களை இனி பெற்றுக்கொள்ளப்போவதில்லை, அதேபோல் இலங்கையின் கையை மீறி வேறு எவருக்கும் துறைமுகத்தை கொடுக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றார்.