வெளிநாட்டு தூதரகங்கள், புலம் பெயர்ந்த மக்கள், உலகளாவிய தமிழ், சிங்கள இஸ்லாமிய மக்கள் ஆகியோரின் விசேட கவனத்திற்கும் ஆலோசனை பெறுவதற்கும் நாட்டு நிலைமை முன்பு இருந்ததை விட மோசமாகியிருக்கிறது என்பதை நான் யாருக்கும் ஞாபகமூட்ட வேண்டிய அவசியம் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
நேற்றியதினம் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பிரச்சினையை நாம் அனைவரும் தேசப்பற்றுடன் நோக்க வேண்டும். சமஷ்டி தீர்வு பற்றி மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டு விட்டது.
தமிழ் தலைமை அதிக ஆர்வத்துடன் மீண்டும் இது தொடர்பில் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. அறுபது வருடங்களுக்கு மேலாக அரசியலில் ஈடுபட்டிருக்கும் நாம் இன்னும் அறுபது வருடங்களுக்கு இதுபற்றி பேச வேண்டியதில்லை. இதில் உள்ள வேண்டுகோள் தற்போதைய பிரதமராகவுள்ள முன்னாள் ஜனாதிபதிக்கு 2014 ஆம் ஆண்டு விடுக்கப்பட்டது.
அதன் உள்ளடக்கம் பல நாடுகளின் ஆதரவுடன் தீர்வுகளைத் தேடி ஐ.நாவுக்குச் செல்லும் முன்னர் சிந்தனைக்கு எடுக்க வைக்கும் என்பது எனது நம்பிக்கை.
அநேக நாடுகள் ஜெனிவா தீர்வு எங்கிருந்து வரினும் அதை எதிர்க்கும் நிலையிலேயே உள்ளன. அது நிலைமையை மேலும் மோசமாக்கும்.
எனவே, முன்னாள் ஜனாதிபதிக்கு விலாசமிடப்பட்டிருக்கும், இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கடிதத்தைத் தீவிர கவனத்துக்கு எடுத்துக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.