உலகில் எங்கேயும் நடக்காத கூத்துக்கள் இலங்கையில்

{"uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"]}

கொரோனா பாதுகாப்பு என்ற பெயரில் எல்லோருமே அவரவர் இஷ்டப்படி சட்டங்களை இயற்றுகின்றனர். சிசுவை எரிக்கின்றனர்,  பாணி மருந்து தயாரிக்கின்றனர், அதை அருந்தியும் காட்டுகின்றனர். இந்த சம்பவங்களையெல்லாம் ஜனாதிபதியும்  பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றார்.

 

 

கொரோனா பரவல் காரணமாக உலகின் ஏனைய நாடுகள் பின்பற்றும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளையெல்லாம் தோற்கடிக்கும் அளவுக்கு இலங்கை பல விடயங்களை அறிமுகப்படுத்தி மூக்கில் விரல் வைக்கச் செய்துள்ளது.  

இந்த வைரஸ் உருவான 150 கோடி சனத்தொகையை கொண்டுள்ள சீனா கூட இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடவில்லையெனும் போது  இலங்கையின் தனித்துவ செயற்பாடுகள் சிந்திக்கவும் ஒரு பக்கம் சிரிக்கவும் மறு பக்கம் சினத்தையும் ஏற்படுத்துகின்றன.

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் இங்கு எரிக்கப்படுகின்றன. உலக சுகாதார ஸ்தாபனமே இவ்வாறு எங்கும் கூறியிருக்கவில்லை. இந்த செயற்பாட்டுக்கு 20 நாட்களே ஆன பச்சிளம் சிசுவும் விதிவிலக்கல்ல.  

ஒருகட்டத்தில் வைரஸால் மரணத்தைத் தழுவிய முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பொறுப்பேற்க அவர்களது உறவினர்களே மறுத்த போது அவற்றை வலுக்கட்டாயமாக எரிப்பதை மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது அரசாங்கம். கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகளை கண்டு பிடித்துள்ள பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் ஜனவரி மாதத்திலிருந்து தமது நாட்டு மக்களுக்கு அவற்றை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளன. 

ஆசிய நாடுகளைப்  பொறுத்தவரை ஜப்பானும் இந்த முடிவை எடுத்துள்ளது. தடுப்பூசியை கண்டு பிடிக்கும் வளங்களையும் ஆற்றல்களையும் கொண்டிருக்கக் கூடிய சீனா பாரம்பரிய மருத்துவ முறைகளால் தனது நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்திய வெற்றிகரமான நாடாக விளங்குகிறது.

ஆனால் இலங்கையில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பாணி மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன. அதை உருவாக்கியவர்கள் யார், இலங்கை சுதேச வைத்திய அமைச்சின் ஆலோசனைகள் பெறப்பட்டனவா, மேற்படி மருந்தின் உட்சேர்க்கைகள் எவை என்பது பற்றியெல்லாம் எந்த உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் இல்லை. 

கேகாலை மாவட்டத்தில் தச்சு வேலை செய்யும் ஒருவர் கடவுளால் தனக்கு வெளிப்படுத்தப்பட்ட கொரோனா மருந்து என ஒரு பாணி மருந்தை அறிமுகப்படுத்தினார். ஒரு பக்கம் அந்த மருந்தை வாங்குவதற்கு மக்கள் அடித்துப்பிடித்துக்கொண்டு கூட்டமாக சென்றதை பார்த்தால் அதன் மூலமாக வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கப்பட்டு விடுமா என்ற அச்சம் தோன்றியது. 

 

இந்த மருந்தை வாங்க அங்கு படையெடுத்த மக்களின் எண்ணிக்கை 12 ஆயிரமாகும். இறுதியில் விசேட அதிரடி படையினர், பொலிஸார் கூட்டத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு நிலைமை சென்றது.

இப்படியான பாணி மருந்து சபாநாயகர் மற்றும் எம்.பி.க்களுக்கும் கிடைத்தது. மருந்தின் ஆதிமூலம் பற்றியெல்லாம்  கவலைப்படாத சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி உட்பட ஏனைய அரசியல்வாதிகள் அதை வாங்கி பருகியமையை என்னவென்று கூறுவது? இதே சுகாதார அமைச்சர் பவித்திரா தான் ஆசிர்வதிக்கப்பட்ட நீரை ஆற்றில் கொண்டு போய் கலந்தார். 

சுகாதார வழிகாட்டல்கள் என்ற பெயரில் எல்லோருமே அவரவர் இஷ்டப்படி சட்டங்களை இயற்றுகின்றனர், சிசுவை எரிக்கின்றனர்,  மருந்து தயாரிக்கின்றனர், அதை அருந்தியும் காட்டுகின்றனர். இந்த சம்பவங்களையெல்லாம் ஜனாதிபதியும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றார். 

கொரோனா வைர ஸுக்கு பாணி மருந்தை அறிமுகப்படுத்திய சம்பத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன  ஊடகவியலாளர் மாநாட்டில் கிண்டலாக கருத்துத் தெரிவித்திருந்தார். “உலக நாடுகள் ஏதாவதொரு நோய்க்கு மருந்துகளை கண்டு பிடிக்கும் போது முதலில் அதை எலிகளுக்கு கொடுத்து பரிசோதித்தே மனிதர்களுக்கு வழங்கும். 

ஆனால் இலங்கையில் அப்படியில்லை. ஆளுக்கொருவர் ஏதாவதொரு பாணி மருந்தை அறிமுகப்படுத்துகின்றனர். அதை விநியோகிக்கும் பொறுப்பை சுகாதார அமைச்சர் உட்பட எம்.பிக்கள் மேற்கொள்கின்றனர். அவர்களே அருந்தி பரிசோதிக்கின்றனர். இங்கு இவர்களே  ‘பரிசோதனை எலிகளாக’ விளங்குகின்றனர். இப்படி ஒரு நாட்டில் இருப்பதையிட்டு நாம் வெட்கமடைய வேண்டியுள்ளது” ராஜித அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

உள்நாட்டு மருத்துவ முறையை வெற்றிகரமாக முன்னெடுத்த சீனாவின் ஆலோசனைகளையாவது சுதேச மருத்துவ அமைச்சு பெற்றிருக்கலாம். இங்கு தயாரிக்கப்பட்ட பாணி மருந்தில் சூடாக்கப்பட்ட தேன் மற்றும் சாதிக்காய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள்வேத மருத்துவத்தில் மிகவும் முக்கியமான மருத்துவப் பொருளான தேனை சூடாக்கவோ குளிர்படுத்தவோ கூடாது என்பது பொதுவாக அனைவரும் அறிந்த விடயம்.

அதை அப்படியே பயன்படுத்த வேண்டும். அதேவேளை சாதிக்காயை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் அது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வாளர்களே கூறியிருக்கின்றனர். 

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட பாணியில் இவை பயன்படுத்தப்பட்ட அளவுகள் என்ன என்பது குறித்த எந்த விளக்கங்களும் இல்லை. பாதிப்புகள் எப்படியிருக்கப்போகின்றன என்பதை அதை அருந்தியவர்களிடமே கேட்டறிய வேண்டும். அதில் சுகாதார அமைச்சரும் சில எம்.பிக்களும் கூட இருக்கின்றனர்.  

இந்த உள்ளூர் மருந்து எத்தகைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளது என்பதை அறிய விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டாலும் கூட, அந்த குழுவினருக்கு இன்னும் இந்த மருந்தின் மாதிரிகள் அனுப்பப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. 

கேகாலையில் கண்டு பிடிக்கப்பட்ட ஆயுள்வேத பாணியானது இலங்கை சுதேச வைத்திய அமைச்சினாலும் ஆயுள்வேத ஒளடதங்கள் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சினால் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லையென்பது முக்கிய விடயம்.

குறித்த மருந்துகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வத்துபிட்டிவல  ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் வைரஸ் தொற்றாளர்கள் சிலர் இதனால் குணமடைந்துள்ளனர் என்ற கூற்று வைத்தியர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இந்த மருந்தை அருந்திய தொற்றாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளின் பின்னர் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக இந்த பாணி மருந்தை உருவாக்கிய தம்மிக்க பண்டார ஊடகங்களுக்கும் தெரிவித்திருந்தார். 

   இதை  அவர் அதிசய குணப்படுத்தல் மருந்து என வர்ணித்துள்ளார். அதாவது வைரஸால் பாதிக்கப்படாதவர்களும் வாங்கி இதை அருந்தினால் அவர்களுக்கு ஆயுள் முழுதும் கொரோனா தொற்று ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.

இருப்பினும்இ அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கமானதுஇ இந்த மருந்து  அதிகாரப்பூர்வமாக பரிசோதிக்கப்படாததால், இதை மக்கள்  நம்ப வேண்டாம் என்று மக்களைக் கோரியது. 

 சிங்கள  பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தம்மிக்க பண்டார, தன்னிடம் உள்ள ஒரு மாய சக்தியைப் பயன்படுத்தியே இந்த மருந்தை உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச வைத்திய பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர்  டாக்டர். எல்.பி.ஏ. கருணாரட்ன இது குறித்து கூறிய போது, அந்த மருந்தில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பண்புகள் காணப்படலாம் ஆனால் அது கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் என்பதை கூற முடியாது என்று தெரிவித்துள்ளார். 

இவ்வாறு கேகாலை பகுதியில் இந்த கொரோனா தடுப்பு பாணி மருந்து பிரபல்யமாவதை அறிந்த நாட்டின் ஏனைய பாகங்களிலும் உள்ள சிலர் தாமும்  இந்த வைரஸுக்கு மருந்து கண்டு பிடித்திருப்பதாக ஊடகங்களை நாடத் தொடங்கினர். மற்றுமொருவர் தான் கண்டு பிடித்து மருந்து பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அறியப்பட்ட சூத்திரம் என்று கூறியதுடன்  இது இலங்கையை ஆண்ட இராவண மன்னன் காலத்து மருத்துவ முறை  என்றும் கூறியுள்ளார்.  இராவணன் இலங்கையை ஆண்ட காலத்தில் கொரோனா தொற்று பரவியிருந்ததா என்பது குறித்து தெரியவில்லை.  ஆனாலும் மக்களை நம்ப வைக்க அவர் கூறிய விடயம் சற்று தீவிரமானது. 

‘எனது மருந்தின் செயற்திறனை நிரூபிக்க கொரோனா தொற்றாளர் ஒருவருடன் படுத்துறங்கவும் நான் தயார்’ என கூறியுள்ளார் அவர். 

இதேவேளை இந்த மருந்துகள் பற்றிய பரபரப்பை தமக்கு சாதகமாக்கிக்கொண்டவர்கள் இருக்கின்றார்கள். இணையவழி மூலமாக தம்மிடம் இந்த மருந்து இருப்பதாக சமூக ஊடகங்களில் படங்களை பிரசுரித்து அதை விற்பனை செய்தவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மருந்து என்ற பெயரில் எதை விற்றார்களோ தெரியவில்லை.

இந்த அடிப்படையற்ற சம்பவங்களால் பாரம்பரிய ஆயுள்வேத மருத்துவத்தின் மீது நம்பிக்கையிழக்கும் தன்மையும் அதிகரித்துள்ளதாக சில வைத்தியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.  வைரஸ் தொற்றாளர்கள் தங்க வைக்ககப்பட்டுள்ள முகாம்களில் கூட அவர்களுக்கு பிரத்தியேகமாக எந்த மருந்துகளும் வழங்கப்படுவதில்லை .  அங்கும் கசாயமே வழங்கப்படுகின்றது என்பது முக்கிய விடயம். 

எனினும் ஆரம்பத்தில் பரிசோதனை எலிகளாக அமைச்சர்கள், எம்.பிக்கள் விளங்கினாலும், ஆர்வம் மற்றும் முன்னெச்சரிக்கை, நம்பிக்கை என்ற அடிப்படையில் பொது மக்களில் சிலரும் உறுதி செய்யப்படாத மற்றும் நிரூபிக்கப்படாத இந்த பாணி மருந்துகளை அருந்தியதன் மூலம் அவர்களும் பரிசோதனை எலிகளாக மாறி விட்டிருக்கின்றனர். 

உலகில் எங்கேயும் நடக்காத கூத்துக்கள் இலங்கையில் அரங்கேறுவதைப் பார்க்கும் போது ஆசியாவின் ‘ஆச்சரியம்’ என அது வர்ணிக்கப்படுவதில் என்ன தான் ஆச்சரியம் உள்ளது?    

 

 

 

 

நன்றி வீரகேசரி