-சுஐப் எம். காசிம்-
மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் மிகப் பெரிய சந்தர்ப்பமாக “கொவிட் 19” சூழலைப் பயன்படுத்தி இருக்கலாம். கலாசாரப் பாகுபாடுகள், இலங்கையில் ஏற்படுகிறதா? என வெளிநாடுகளில் நோக்கப்படுமளவுக்கு, ஜனாஸா எரிப்பின் எதிரொலிகள் ஏற்படுத்தி வருகின்றன. “உள்நாட்டுப் பிரச்சினைகளை ஊருக்குள்ளே பேசித் தீர்ப்போம், வெளிநாடுகளின் தலையீடுகள் வேண்டியதில்லை” என்ற ராஜபக்ஷக்கள் தலைமையிலான அரசுக்கு, லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், பிரிட்டன் பாராளுமன்ற கவனயீர்ப்பு உரைகள் என்பன அதிருப்தியை ஏற்படுத்தியேயிருக்கும். லண்டன் முஸ்லிம் கவுன்சில் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தின் அடித்தள சக்திகளை அடையாளம் காணும் பொறுப்புக்கள், ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களிடம் ஒப்படைக்கப்படாமல் இருக்காது. நாட்டை சர்வதேசக் களத்துக்கு கொண்டு சென்ற விடயத்தில் இந்த அரசு சோம்பேறியாக இருக்கப் போவதில்லையே!.
கனத்தையில் தொடங்கப்பட்ட கபன் சீலை போராட்டம் மத, இன வேறுபாடுகள் இன்றி, நாடு தழுவிய ரீதியில் பரவியமையும் அரசுக்கு நமைச்சலாக இல்லாதிருக்காது.
இந் நிலையில் புலிகள் சார்பான புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், லண்டன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்கான ஆதாரங்கள் ஊர்ஜிதமானால் நிலைமைகள் நிச்சயமாக வேறு திசையிலேயே பயணிக்கும். சிறுபான்மைச் சமூகங்களை ஒன்றிணைக்க விரும்பும் அந்நிய ஆதிக்க சக்திகளின் ஏற்பாடாகவே தென்னிலங்கைக்கு இது காட்டப்படும். இது ஏற்படாதிருந்தால் மாத்திரமே, லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம் காலத்தின் தேவைக்கான களப்பணி எனலாம்.
இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க விடயம், எந்த வகையிலும் நியாயத்திற்கு உட்பட்டதுதான். ஆனால், இந்த உரிமைக்கான குரல்கள், ஒரே கருத்தில் இருக்கவில்லை என்பதுதான் கவலை. சித்தாந்தம் வேறு, வேதாந்தம் வேறு என்ற புரிதலில் உள்ள பலவீனங்களே, இந்த உரிமைக்கான வெற்றியைத் தூரமாக்கி வருகின்றது.
“இஸ்லாம் விரும்பும் உச்சபட்ச ஆத்மீக ஒழுங்கியல் நம்பிக்கை ‘நல்லடக்கம்’. இதற்கு அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும்” என்ற கருத்தியலில் மாத்திரமே குரல்கள் எழும்ப வேண்டும். மாறாக நல்லடக்கத்திற்கான மார்க்க விளக்கம், வியாக்கியானங்களைத் தவிர்ப்பதே சிறந்தது. ஒவ்வொரு மதங்களதும் நம்பிக்கைகள், லௌகீக நடைமுறைகளில் வேறுபடுவதால் மத வியாக்கியானங்களை முன்வைத்து விவாதிப்பது, குரல் எழுப்புவது மாற்று மதத்தவரின் நம்பிக்கைகளில் குறுக்கிடவே செய்யும்.
பௌத்த, இந்து மதங்களின் இறுதிக் கிரியைகள் அக்னிச் சுவாலையுடன் தொடர்புடையன. இந்நிலையில், உயிரிழந்த உடல்களுக்கு தொடுகை உணர்வு உண்டென்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. லௌகீகப் பார்வையில், இம்மதங்களின் நடைமுறைகள் வேறுபடுவதையே இவை உணர்த்துகின்றன. இந்த வேறுபாடுகளின் பின்புலங்களைப் புரிந்துகொள்வதனூடாகவே, சமயங்களின் வேதாந்தங்களைப் புரிய முடிகிறது. இதனால்தான், மதங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த முடியுமே தவிர, நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதெனப்படுகிறது. இந்த இணக்கம் ஏற்பட்டிருந்தால் எல்லோரும் ஒரே மதத்தவராகியிருப்போமே!.
இதில், இன்னொரு சிலரின் நடவடிக்கைகள், சமூகக் கூட்டுப் பொறுப்பிலிருந்து அவர்களை விலக்கியும் வைத்துள்ளது. மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி கடலரிப்புக்குள்ளாவதால் வெளியாகும் ஜனாஸாக்களின் உடற்பாகங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, மண்ணறையின் லௌகீகக் காட்சிகளை அம்பலப்படுத்தி, அசிங்கப்படுத்தியுள்ளனர். மண்டை ஓடுகள், எலும்புகள், அங்கச் சிதைவுகளைக் காணும் மாற்று மதத்தினர், உக்கிப்போன எலும்புகளிடமா கேள்விக்கணக்குகள்? இவையா மண்ணறையில் உயிர்ப்பிக்கப்படும்? என வாய்பிளக்கின்றனர். கொரோனா ஜனாஸாக்களையும் அடக்கம் செய்தால் இவ்வாறுதான் எலும்புகள் மண்ணுடன் கலந்துவிடுமென, ஏனைய சமூகத்தினர் எண்ணுவதற்கு, இந்த சமூகப் பொறுப்பிலிகள் வழிகளைத் திறந்து விடுவதுதான் கவலை. நல்லடக்கத்தின் நம்பிக்கைக்காகப் போராட்டம் நடக்கும் சூழலிலா, இந்தப் பொறுப்பிலிகள் இவ்வாறு நடந்துகொள்வது?
சுமார் 1500 வருடங்களுக்கு முன்னரே இஸ்லாம் இச்சந்தேகத்தை தெளிவுபடுத்திவிட்டது. “இறந்து ஈச்சம்பாளைகளான எலும்புகளாகி உக்கிய பின்னருமா நாங்கள் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோம்? என நிராகரிப்பாளர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நபியே! நீர் கூறும். நீங்கள் எதுவுமில்லாத நிலையிலிருந்த போது, உங்களைப் படைத்த இறைவனுக்கு இது பெரிய காரியமில்லை” (புனிதகுர்ஆன்).
எனவே,லௌகீக வியாக்கியானங்கள் இல்லாமல் மத நம்பிக்கையை வென்றெடுக்க குரல்கொடுப்பதே உள்ள வழி. இந்த விடயத்தில், அரசாங்கத்திற்கு இருந்த கடினமான மனநிலை சற்றுக் கசிந்து வந்தமைக்கான நிலைமைகள் தென்படவே செய்கிறது. கொங்ரீட்டிலான ஜனாஸாப் பெட்டிகள் பற்றி அரசாங்கம் அங்கலாய்ப்பதும், இறுக்கமான நிலைப்பாடுகள் தளர்ந்த அடையாளந்தான்.
எனினும், இவற்றை இலங்கையில் அடக்கம் செய்வதற்கு எதிராகக் கிளம்பும் கெடுபிடிகளே அரசுக்கு சவாலாகி வருகிறது. “நல்லடக்கம் வேண்டும் அவ்வளவுதானே! மாலைதீவா, மலேஷியாவா எங்கென்றாலும் எமக்கென்ன” என்ற தற்காலிக நிலைப்பாட்டுக்கு வருவதும், இனவாதக் கெடுபிடிகள் நீளும் நிலையில் தப்பில்லை என்றும் சிலர் அபிப்பிராயப்படுகின்றனர்.
இனவாதக் களம் கூர்ந்த பார்வையில் விரியும் சூழலிலும் இலங்கையில்தான், நல்லடக்கம் வேண்டுமென விரும்புவது, அடிப்படைவாதச் சாயம் பூசப்படும் ஆபத்தையே இன்னுமின்னும் ஏற்படுத்துமென சிலர் சந்தேகிக்காமலும் இல்லை. ஆனால், முக்கிய அமைச்சர் ஒருவரின் மனக் குமுறல்கள், “தாய் நாட்டில்தான் நல்லடக்கம் செய்ய வேண்டும்” என்ற ஒட்டுமொத்த சமூகத்தின் விருப்பையே வெளிப்படுத்துகிறது. மாலைதீவிலும் இதற்கு எதிரான சலசலப்புக்கள் எழும்பத் தொடங்கியுள்தால், பேரினவாதம் விழித்துக்கொள்வதற்குள்ளும், முடிவுகளை மாலைதீவு மீள்பரிசீலிக்க முன்னரும் முஸ்லிம்கள் முன்யோசனையுடன் நடந்துகொள்வதுதான் தீட்சண்யமாக இருக்கும்.
“விஞ்ஞானமே நிரூபித்துவிட்ட பின்னரும் அனுமதிக்கவில்லையே!” என்று அரசாங்கத்தைக் குறை கூறுவது கள விளம்பரத்துக்கு நல்லதாக இருக்கும். ஆனால், ஆத்மீக நம்பிக்கையை (நல்லடக்கம்) வெல்வதற்கான கடுமையான உழைப்புக்களை, இவ்விருப்பங்கள் இழுத்தடிக்கவே செய்யும்.
கடந்த காலங்களில், சிறுபான்மைத் தலைமைகளின் தீட்சண்யத்துக்கு தலைக்கனம் ஏற்பட்டதால்,விடப்பட்ட தவறுகளின் வலிகளைத்தான் முஸ்லிம்கள் அனுபவிக்க நேரிட்டுள்ளது. இந்த நேரத்திலா இதைச் சொல்வது? என சிந்திப்பதல்ல தீட்சண்யம். இனியும், இவ்வலிகள் ஏற்படாதவாறு சிந்திப்பதற்கு கடந்த காலத் தலைக்கனங்கள் வழிகாட்ட வேண்டியுள்ளதே!.
லண்டன் ஆர்ப்பாட்டங்கள் வேறு பின்னணிகளுடன் முடிச்சுப் போடப்பட்டால், நிலைமைகளை நினைக்கவே பரிதாபமாக இருக்கும். இருபது நாள் குழந்தை எரிக்கப்பட்ட மனக்காயங்களும் குமுறல்களும், ஏற்கனவே எரிந்து போன எமது சொந்தங்களின் செந்தணல்களும் மூன்றாம் தேசத்தின் முதுகெலும்பாகக் கட்டி எழுப்பப்பட வேண்டுமானால், தலைக்கனமன்றி தீட்சண்யமே தலைசிறந்த தீர்வாக இருக்கும்.