வெளிப்பிரதேசங்களுக்கு மாத்திரமல்ல எங்கு சென்றாலும் உங்களது விபரங்களை பதிவு செய்ய வேண்டும். தங்களது பெயர், விலாசம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை பதிவிட வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, பண்டிகை காலத்தை முன்னிட்டு பலரும் பல்வேறு நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவார்கள். இந்நிலையில் இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினரும்,பொலிஸாரும் மற்றும் பாதுகாப்பு படையினரும் பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளது. இதன்போது உங்களுடைய விபரங்கள் சேகரிக்கப்பட்டால் உண்மை தகவல்களையே வழங்குங்கள்.
வெளிபிரதேசங்களுக்கு செல்லும் போதும், வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் போதும் நீங்கள் பல்வேறு நபர்களை சந்திக்கின்றீர்கள். உதாரணமாக பேரூந்தில் நீங்கள் செல்லும் போது , அதில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் ஒருவரும் பயணித்திருந்தால், உங்களது விபரங்கள் இருந்தால் உங்களை தொடர்புக் கொண்டு வைரஸ் பரவல் ஏனையவர்களுக்கும் பரவாத வகையில் தடுக்கமுடியும். இதனால் எப்போதும் உங்களது, பெயர், வீட்டின் முகவரி ,தொலைபேசி இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பவை எழுத கூடிய பதிவு ஆவணம் பொதுமக்கள் வந்து செல்ல கூடிய அனைத்து இடங்களிலும் காணப்பட வேண்டும்.
தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அரச நிறுவணங்களில் பணிபுரிபவர்கள் இத்தகைய ஆவணங்களை வைத்திருப்பார்கள். அதேபோன்று இவ்வாறான குறிப்பு அட்டைகள் இல்லாதவர்கள் சாதாரணமாக ஒரு கடதாசி தாளில் எழுதி அருகில் வைத்துக் கொள்ளுங்கள். இதன்போது உங்களது விபரங்களை யாராவது கேட்டால், அந்த தாள்களை கொடுப்பதற்கு இலகுவாக இருக்கும்.