இலங்கை கடற்பரப்புக்குள் பிற நாட்டவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கலமெடிய மீன்பிடி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த பிரதமர் மேலும் கூறுகையில்,
குறுகிய காலத்தில் 379.53 மில்லியன் செலவில் கலமெடிய மீன்பிடி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டது. இலங்கை அரசியல் வரலாற்றில் பல பிரதான கட்சிகள் ஆட்சியதிகாரம் செலுத்தியுள்ளன. ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் கலமெடிய மீன்பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.
நாட்டில் தற்போது 22 மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மீன்பிடி கைத்தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடற்சார் கைத்தொழில் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது
இலங்கை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாக காணப்பட்டாலும் பிற நாடுகளில் இருந்து மீன் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.
இலங்கை கடற்பரப்பில் பிற நாட்டவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுப்படுகிறார்கள். இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல்வளங்களை பாதுகாக்க அரசாங்கம் சிறந்த திட்டம் வகுத்துள்ளது. விவசாயத்துறைக்கும், மீன்பிடி கைத்தொழிலுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
மீன்பிடி கிராமங்கள் பல அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. மொறட்டுவ, அம்பாந்தோட்டை, உள்ளிட்ட பெரும்பாலான மீன்பிடி கிராமங்களில் வாழும் மீனவர்களுக்கு நிரந்தர வீடு வழங்கப்பட்டுள்ளது. 30 வருடகால யுத்தத்தினால் வடக்கு மக்களின் பிரதான வாழ்வாதாரமான மீன்பிடி கைத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வடக்கில் மீன்பிடி கைத்தொழில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார்.