கிழக்கில் தற்போதைய பீ.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை,கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அக்கரைப்பற்று பகுதியிலுள்ள பிரதேசங்களில் ஏற்பட்ட கொத்தணி காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 37 பேரும், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மற்றுமொருவரும் சம்மாந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இறக்காமம் பகுதியை சேர்ந்த ஒருவரும் பீ.சி.ஆர் பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டு அம்பாறை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அக்கரைப்பற்று பொலிஸ் எல்லைக்குட்பட்ட ஆலையடி வேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய மூன்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இத்தொற்றின் பாதிப்பு காணப்படுகின்றது. இதனால் இப்பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பிரதேசத்தில் வீணாக நடமாடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்பதுடன்,அத்தியாவசிய தேவை தொடர்பில் இம்மூன்று பகுதி பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரைக்கும் தனிமைப்படுத்தல் தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் கடைப்பிடிக்கப்படும்.
இத்தனிமைப்படுத்தலானது 7 நாட்கள் முதல் 14 நாட்கள் தொடர்வதற்கு சாத்தியமுள்ளது.இத்தனிமைப்படுத்தல் நீடிக்க காரணம் தொற்று ஏற்பட்டதாக கூறப்படும் சந்தைப்பகுதிக்கு நாளாந்தம் நூற்றுக்கணக்கான நபர்கள் வந்து செல்கின்றனர்.
இதனால் குறித்த மூன்று பிரதேசத்தில் உள்ளவர்கள் சந்தையுடன் தொடர்புள்ளவர்கள் மற்றும் தொற்றாளர்களுடன் தொடர்புள்ளவர்கள் அடையாளப்படுத்தப்படும் வரை தனிமைப்படுத்தல் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படும்.இந்த நோயின் தாக்கம் குறித்து அறிவதற்கு மக்களின் நடவடிக்கை அமைகின்றது.
இந்த தொற்று நோயை சுகாதார துறை, பொலிஸ் துறை, இராணுவத்தினர் ,பிரதேச செயலகத்தினாலோ தடுக்க முடியாது. ஆலையடி வேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பகுதி மக்கள் தங்களை உணர்ந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மக்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில்,
புதிதாக அடையாளப்படுத்தப்பட்டவர்களில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும் ,அட்டாளைச்சேனையில் இருவருக்கும், ஒருவர் ஆலைடியவேம்பு பிரதேச சுகாதார பணிமனைக்குட்பட்டவர் எனவும், அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர்களின் குடும்பங்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேநேரம் தொற்று மேலும் அதிகரிக்கலாம் என கூறிய அவர் புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்படும். இச்சந்தர்ப்பத்தில் மக்கள் முகக்கவசம் அணிவதை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
சமுக இடைவெளி பேணாமை, முகக்கவசம் அணியாமை, பலர் ஒன்று கூடுதல் போன்ற நடவடிக்கைகள் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்படவுள்ளன. இதேவேளை, அக்கரைப்பற்று சுகாதாரப்பிரிவு தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே தாங்களும் தங்களது உறவுகளும் பாதுகாப்பாக இருக்க கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் அக்கரைப்பற்று நகர் பகுதிக்கு செல்வதை முற்றாக தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
மேலும் பாடசாலை மாணவர்கள் எவருக்கும் இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.