உலகலாவிய ரீதியில் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் அவற்றுக்கு முகங்கொடுப்பது தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோர் அவதானம் செலுத்தியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் நேற்று திங்கட்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போதே உலகிலாவிய ரீதியில் அச்சுறுத்தலாக அமைந்துள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலானது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பாரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் , அதனால் ஏற்பட்டுள்ள சவால்கள் தொடர்பிலும் , அந்த சவால்களுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை இலங்கைக்கு பொருத்தமான தேசிய சுற்றுச்சூழல் கொள்கையை வகுப்பதன் முக்கியத்தும் குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் உலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவருடனான சந்திப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றினை இட்டுள்ளார். அந்த பதிவிலும் மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.