“எல்லாப் புகழும் அகிலம் அனைத்தையும் படைத்து பரிபாலனம் செய்யும் அல்லாஹ்விற்கே உரித்தானது”. (திருக்குர்ஆன் 1:2)

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1604100288881"}

எந்த ஒரு பொருளுக்கும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த ஒரு சக்தியும் இல்லை. அனைத்தும் இறைவனின் கட்டளைப்படியே நடக்கிறது என்பதை கீழ்க்கண்ட இந்த திருக்குர்ஆன் வசனங்கள் உறுதியாக கூறுகிறது:

“எல்லாப் புகழும் அகிலம் அனைத்தையும் படைத்து பரிபாலனம் செய்யும் அல்லாஹ்விற்கே உரித்தானது”. (திருக்குர்ஆன் 1:2)

“வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:126)

வான்கோள்கள், கிரகங்கள் என அண்டசராசரம் அனைத்தும் கட்டுக்கோப்பாக இயங்க வேண்டும் என்றால் அதற்கு அல்லாஹ்வின் அருள் இருந்தால் மட்டுமே முடியும். அதுபோல அனைத்து கிரகங்களில் வாழும் உயிரினங்கள் இயங்குவதற்கும் அல்லாஹ்வே பொறுப்பேற்றுக் கொள்கிறான்.

எந்த ஒரு உயிரினத்தின் வாழ்வும், இயக்கமும், வீழ்ந்து மடிவதும், அவன் இரத்தக்கட்டியாய் உருவான நிமிடத்திலேயே நிர்ணயிக்கப்பட்டு விட்டன. அவன் வாழும் காலத்தில் கொடுக்கப்பட உள்ள செல்வங்கள், கல்வித்திறன், பெறப்போகிற புகழ், உயர்வுகள், இகழ்வுகள் அனைத்துமே பதியப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மனிதன் தன் செயல் குறித்து பெருமை கொள்வதற்கு முகாந்திரமே இல்லை. இருந்தாலும் முயற்சிகள் செய்வதற்கு முட்டுக்கட்டை போடவில்லை இஸ்லாம். அதே சமயம், ‘நான்தான் சாதித்தேன், என்னால் தான் எதுவும் முடியும்’ என்ற இறுமாப்பு கொள்வதைதான் அது ஏற்றுக்கொள்வதில்லை.

“அல்லாஹ்வின் அருளால் முயன்றேன், அவன் உதவி கொண்டு சாதித்தேன்” என்று கூறினால் அது நன்றி செலுத்தும் நற்செயலாக மாறி விடுகின்றது.

அத்தனைப் பொருட்களின் இயற்கையான இயல்பு தன்மை கூட அவன் கட்டளையில்லாமல் செயல்படுத்த முடியாது. இனிய தென்றலை இடியோசையோடு கூடிய சூறாவளியாய் மாற்றவும் அவனால் முடியும், சிறிய விதையில் பெரும் விருட்சங்களை அவனால் கொண்டு வரவும் முடியும். சிறுதுளியாய் விந்துவிலிருந்து வித்தைகள் பல கற்ற விந்தை மனிதனை உருவாக்க முடியும். அதில் அகிலம் ஆளும் அரசனும், ஆண்டியும் அடக்கம்.

ஆனாலும் மனிதனின் பாவத்தின் மிகைப்பால் ஓஸோன் படலத்தில் ஓட்டைகள், எரிமலைகளின் எகிறல்கள், ஆழ்கடலின் ஆர்ப்பரிப்புகள், காட்டுத் தீயின் கொடூரங்கள், இயற்கையின் சீற்றங்கள், மாறுபட்ட விளைவுகள் எல்லாம் ஏற்படுகின்றன.

இவை அனைத்தும் அல்லாஹ்வின் எச்சரிக்கைகள் என்பதை ஏனோ மனிதன் உணர மறுக்கின்றான்.

சிறிய, கண்ணுக்குப் புலப்படாத ஒரு கிருமியைக் கொண்டு உலகத்தையே கால நிர்ணயம் இல்லாமல் முடக்கிப் போடும் அல்லாஹ்வின் ஆற்றலின் முன்னால் மனிதனின் அறிவு என்ன செய்ய முடிந்தது, முடிவில்லா தொடர்கதையாய் இன்றும் தொடந்து கொண்டிருக்கிறதே?

“பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ அல்லது மலையின் உச்சியை அடைந்து விடவோ உங்களால் முடியாது” (திருக்குர்ஆன் 17:37).

திருக்குர்ஆனின் இந்த படிப்பினை மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளத்தக்கது. இறைவனால், நெருப்பால் படைக்கப்பட்டவன் இப்லீஸ், களிமண்ணால் படைக்கப்பட்ட வன் மனிதன். அந்த மனிதனுக்கு அடிபணிந்து நடக்கும்படி கூறப்பட்டபோது அதை ஏற்க இப்லீஸ் மறுத்தான். ‘நான் நெருப்பால் படைக்கப்பட்டவன், மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டவன். என்னை விட மனிதன் உயர்ந்தவன் அல்ல. எனவே மனிதனுக்கு அடிபணிய மாட்டேன்’ என்று ஆணவத்துடன் கூறினான்.

இறைவன் கட்டளைக்கு அடிபணிய மறுத்ததால் இழிநிலைக்குத் தள்ளப்பட்டான். உலகம் அழியும் வரை ‘இப்லீஸ் ஒரு ஷைத்தான்’ என்ற சாபத்திலேயே நிலைத்து விட்டான்.

பெருமை பாராட்டும் மனிதனை அல்லாஹ் ஒருபோதும் விரும்புவதில்லை. ‘மனிதர்களில் எந்த வகையிலும் ஏற்றத்தாழ்வுகள் இல்லை’ என்பதே அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் போதித்த தத்துவம். ‘விண்ணகமும், மண்ணகமும் கோலோச்சும் அவன் அருளின்றி இயக்கம் இல்லை’ என்று அறிந்திருந்தும் மனிதன் பெருமை கொள்ளலாமா?. அந்த உரிமை இறைவனுக்கு மட்டும் சொந்தமல்லவா?.

புகழப்பட வேண்டியவன், புகழுக்குரியவன், புகழாகவே உள்ளவன் அல்லாஹ் ஒருவன் தான். எனவே, கர்வம், ஆணவம் போன்றவற்றை விட்டுவிடுவோம். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே என்று உரத்துச்சொல்வோம்.