சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை நடந்து வருகிறது. சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டு மாநாடு பீஜிங்கில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கம்யூனிஸ்டு கட்சியின் 198 மத்தியக்குழு உறுப்பினர்கள், 166 மாற்று உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் மத்தியக்குழு உறுப்பினர்கள் அதிபர் ஜின்பிங்கின் செயல்பாடுகளை மதிப்பிட்டனர். இதையடுத்து அவர் அடுத்த 15 ஆண்டுகளுக்கு சீனாவின் அதிபராக தொடர்ந்து பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும் 14-வது ஐந்தாண்டு திட்டத்திற்கும் (2021- 2025) ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஐந்தாண்டு திட்டத்தில் உள்ளூர் சந்தையை மேம்படுத்தி பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
ஏற்றுமதியை அதிகமாக நம்பி இருக்காமல் உள்நாட்டு நுகர்வு மூலம் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இந்த ஐந்தாண்டு திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான யோசனையை சீன அதிபர் ஜின்பிங் முன் வைத்ததும் தெரிய வந்துள்ளது.
சீன கம்யூனிஸ்டு கட்சியின் நிறுவனர் மாசே துங்குக்கு பிறகு கட்சியின் அதிகாரம் மிக்க தலைவராக ஜின்பிங் வளர்ந்துள்ளார். அதிபர் பதவி தவிர கட்சியின் பொதுச் செயலாளர் பதவி, ராணுவத்தின் தலைமை பதவி ஆகியவற்றையும் அவரே வைத்துள்ளார்.
ஆயுள் முழுவதும் அவர் இந்த பதவிகளில் இருப்பார் என்று தெரிகிறது. இன்னும் 15 ஆண்டுகளுக்கு அவருக்கு அதிபர் பதவி நீட்டிக்கப்பட்டு இருப்பதால், அந்த பதவிக்காலம் முடியும் போது அவருக்கு 82 வயதாகும். எனவே அதற்கு முன்னதாகவே அவருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கப்படவே அதிகம் வாய்ப்பு உள்ளது.
ஜின்பிங் கடந்த 2012-ம் ஆண்டு சீன அதிபராக பொறுப்பு ஏற்றார். அவரது 2-வது பதவிக்காலம் 2022-ம் ஆண்டு முடிவடைய இருந்தது. ஆனால் அதற்குள் தொடர்ந்து 15 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு இருப்பதால் 2035-ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார்.