நாட்டின் பிரதமரான மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு என்னால் எழுதி அனுப்பபட்ட திறந்த மடல்…!
அதிகௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களே…நான் உங்களுக்கு எத்திவைக்க நினைக்கும் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தோடு இந்த மடலை வரைகின்றேன். தயவு செய்து இதன் உண்மைத்தண்மையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு இதனை எழுதுகின்றேன். உங்களுக்கும் எனக்கும் மிடையிலான உறவு என்பது அரசியலுக்கு அப்பால்பட்டது என்பதோடு, உண்மைகளை என்னோடு பகிர்ந்துகொள்ள நீங்கள் எனக்கு தந்த அனுமதியின்மேல் கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே இந்த விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள இந்த கடிதத்தை எழுதுகின்றேன்.
நான் சொல்லவரும் விடயம் 20பதுக்கு ஆதரவாக வாக்களித்த நாலு எம்பிக்கள் சம்பந்தமாகவும், மு.காங்கிரசின் தலைவர் ஹக்கீம் சம்பந்தமட்டதாகும் என்பதை உங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து விடயத்துக்கு வருகின்றேன்.
ஹக்கீம் அவர்களை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கும் வரை நாலு எம்பிக்களும் நிலாவை கொண்டுவந்து உங்களின் மடியில் வைத்தாலும், இவர்களை கடைசிவரையும் இதய சுத்தியோடு நம்பி நடு வீட்டிக்குள் சேர்த்துவிடாதீர்கள். இவர்கள் எப்படி கடந்தகாலங்களில் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் எள்ளிநகையாடினார்கள் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.அதுமட்டுமல்ல உங்கள் ஆட்சியில் இருந்து அனுபவிக்கமட்டும் அனுபவித்துவிட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டால் அவர்களுடைய சுயரூபத்தை காட்ட துவங்கிவிடுவார்கள். இதுதான் ஹக்கீம் காங்கிரசாரின் வழமையான பழக்கம் என்பதை எங்களிடமே நீங்கள் கூறி கவலைப்பட்டீர்கள்.
இப்போது பல அரசியல்மாற்றங்கள் நிகழ்ந்த நிலையில், நீங்களும் உங்கள் அணியினரும் மீண்டும் நிலையான ஆட்சியை அமைத்துள்ளீர்கள். இந்த சந்தர்ப்பத்தில்தான் மு.காங்கிரசை சேர்ந்த நாலு எம்பிக்களும் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்து உங்களது கொள்கையையும், ஆட்சியையும் ஏற்றுக்கொண்டு செயல்பட சைக்கினை காட்டியுள்ளார்கள் என்றே கூறவேண்டும். ஆனால் இந்த ஆதரவானது, உண்மையான ஆதரவுதான் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு அவர்களை உங்களோடு இணைத்து பயணிக்க விரும்பினால் பின்வரும் விடயங்களை நீங்கள் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.
கடந்த காலங்களில் டயஸ்போராக்களின் சிந்தனையோடு இணங்கி செல்படுபவர்களின் கைப்பொம்மையாக இருந்துகொண்டு முஸ்லிம் சமூகத்தை உங்களின் எதிரியாக சித்தரித்துகாட்டி வெற்றிபெற்ற ஹக்கீம் அவர்களை இந்த நாலு எம்பிக்களும் தலைவராக ஏற்றுக்கொள்ளும் காலமெல்லாம் இவர்களை நீங்கள் நம்பவே கூடாது என்பதோடு, அவர்கள் ஹக்கீமின் தலைமையை ஒதுக்கிதள்ளிவிட்டு உங்களிடம் வருவார்களேயானால் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவது மட்டுமல்ல, முடிந்தால் இதர சலுகைகளையும் வழங்கி அவர்களை உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அவர்கள் உங்களோடு இதயசுத்தியோடு பயணிக்க அது ஏதுவாக அமையும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
அதேநேரம் உங்களின் ஆட்சிக்காலமான 2005, 2010 ல் நீங்கள் நடந்து கொண்டதைப்போன்று மீண்டும் இவர்களை மெத்தையிலே தூக்கி வைப்பீர்களானால், மீண்டும் ஒரு தேர்தல்காலம் வந்தால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த நாலுபேரையும் அழைத்துக்கொண்டு மீண்டும் உங்களுக்கு எதிராகவே செயல்பட துணிவார் ஹக்கீம். அந்த நேரம் முஸ்லிம்கள் தொப்பிபிரட்டிகள் அதுஇதுவென்று பட்டங்கள் சூட்டி இவர்களை வசைபாட துவங்கி விடுவார்கள் உங்கள் அணியினர். அந்தநேரம் பெரும்பாண்மை சிங்கள மக்களும் இவர்களோடு சேர்த்து முஸ்லிம் சமூகத்தையும் எதிரியாக பார்க்கும் நிலையே ஏற்படுகின்றது. இதனால் முற்றுமழுதாக பாதிக்கப்படுவது முஸ்லிம் சமூகம்தான். இன்றும் அதேபோன்ற நிலைதான் தொடர்கின்றது என்பதை நீங்களும் அறிவீர்கள்.
ஆகவே நாட்டின் பிரதமராக மட்டுமல்ல, உயர்ந்த சிந்தனைகொண்ட மஹிந்த ராஜபக்ஸவாகிய நீங்கள் என்றென்றும் முஸ்லிம் சமூகத்தின் விருப்பத்துக்குறியவராக மாறவேண்டும் என்ற அவா எங்களிடம் நிறைந்தே காணப்படுகின்றது. அந்த இலக்கை அடைந்துகொள்ள வேண்டுமாக இருந்தால் உங்களை ஆதரிக்க முடிவு செய்து, 20வது திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த மு.காங்கிரசை சேர்ந்த நாலு எம்பிக்களையும் நீங்கள் பூரண இதய சுத்தியோடு இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோளாகும்.
அதேநேரம் ஹக்கீம் அவர்களின் கட்டுப்பாட்டில் இந்த நாலு எம்பிக்களும் இருக்கின்றபோது, இவர்களை இணைத்துக்கொள்வீர்களேயானால், அந்த சதிதிட்டத்துக்கு பின்னால் ஹக்கீம் அவர்கள் மட்டுமல்ல, ஹக்கீம் அவர்களுக்கு மூளையாக இருந்து செயல்படும் டயஸ்போராக்களும், சுமேந்திரன் ஐயாவும் பின்னால் இருந்து செயல்படுவார்கள் என்பதை நீங்கள் அறியாதவரல்ல. இந்த விடயங்களை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் எத்திவைப்பது எனது கடமையென்று நினைக்கின்றேன். உங்களை நான் சந்தித்தபோது இந்த அனுமதியை எனக்கு தந்தீர்கள். அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த தகவல்களை பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டு எழுதுகின்றேன். முடிவு உங்கள் கையில் என்று கேட்டு விடைபெறுகின்றேன்…நன்றி
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.