“எனது சகோதரர் நிரபராதி. எந்தவொரு குற்றச்சாட்டுக்களுடனும் அவர் தொடர்புடையவர் அல்லர்” என நான் முன்னரே கூறியிருந்தேன்

 
ஊடகப்பிரிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வர்த்தகர் இன்ஷாப் இப்ராஹீம், தனது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தார் என்ற காரணத்துக்காகவே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது விசாரணைகளின் பின்னர், நிரபராதியாக இருந்தமையினாலேயே விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரவித்தார்.

வவுனியாவில் இன்று காலை (01) ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

“ஒரு சம்பவத்தில் ஒருவர் குற்றவாளியாக இருந்தால்தான் சிறையிலே அடைப்பது வழமை. அதற்கு நேர்மாறாக குற்றவாளி என்று நிரூபிப்பதற்கு முன்னரேயே எனது சகோதரரை கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்தனர்.

‘இரு தினங்களில் விடுவிக்கப்படுவார்’ என்று அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழே அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். சுமார் ஐந்தரை மாதங்களின் பின்னர், சகோதரர் ரியாஜ் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

“எனது சகோதரர் நிரபராதி. எந்தவொரு குற்றச்சாட்டுக்களுடனும் அவர் தொடர்புடையவர் அல்லர்” என நான் முன்னரே கூறியிருந்தேன். நீதி என்றோ ஒருநாள் வெல்லும் என்றும் ஊடகங்களிடம் பலமுறை தெரிவித்திருந்தேன். எனினும், எவ்வாறான விசாரணைகளுக்கும் அவர் ஒத்துழைப்பை வழங்குவார் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

இந்த நிலையில், ஐந்தரை மாதங்கள் கடந்து, எந்தக் குற்றச்சாட்டுக்களுடனும் தொடர்பில்லை என்ற காரணத்தினால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்காக இறைவனுக்கு நாம் நன்றி செலுத்துகின்றோம். ஒரு சம்பவத்திற்காக விசாரணை மேற்கொள்ளும்போது, குற்றவாளியாக இருந்தால்தான் சிறையில் அடைப்பது வழமை என்று சட்டத்தரணிகள் கூறுகின்றனர். அதற்கு நேர்மாறாக, எனது சகோதரர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட முன்னரேயே கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

நூற்றுக்கணக்கான உயிர்களை பலியெடுத்த, 500 க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அதற்கு எமது பூரண ஆதரவு என்றும் உண்டு எனவும் தெரிவிக்கின்றோம்” என்று கூறினார்.