கொரோனா வைரஸ் பரவல் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
வைரசால் பாதிக்கப்பட்ட நபர் இருமும்போதும், தும்மும்போதும், பேசும் போதும் வெளிப்படும் நீர்துளிகளால் பரவும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்பின் நடந்த ஆய்வுகளில் கொரோனா வைரஸ் காற்றிலும் பரவும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீண்ட தூரம் காற்றில் பரவாது என்று சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் மூடப்பட்ட அறைகளில் விரைவாக பரவும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஜமனா இன்டர்னல் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் நீர்துளிகள் மூலம் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு எளிதில் பரவக்கூடும் என்று நம்பப்படுகிறது.
ஆனாலும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக இடைவெளி மற்றும் அடிக்கடி கை கழுவுதல் ஆகியவை உலகளவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவில்லை.
அதற்கு பதிலாக புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று அமெரிக்க ஜார்ஜியா பல்கலைக்கழக ஆய்வாளர் யேஷென் கூறினார்.
மேலும் அவர் கூறும் போது, எங்கள் ஆய்வில் கொரோனா தொற்று நீண்ட தூரத்துக்கு பரவுவதற்கான சான்றுகளை வழங்கியது. அது காற்றிலும் பரவக்கூடும் என்றார்.
சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் மூடப்பட்ட அறையில் புழக்கத்தில் இருக்கும் இடத்தில் நீர்துளிகள் மூலம் கொரோனா பரவக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது. மூடப்பட்ட அறைகளில் கொரோனா வைரஸ் விரைவாக பரவும்.
மூடப்பட்ட அறைகளில் ஒரு நபர் பேசும்போது வெளியாகும் சிறிய நீர்துளிகளின் தெளிப்பை விரைவாக மீட்டர் இடைவெளியில் கொண்டு செல்கிறது. இதுவும் கொரோனா பரவலுக்கான முக்கிய காரணமாகும்.
சீனாவில் ஒரு பேருந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும், மற்றொரு பேருந்தில் கொரோனா தொற்று இல்லாதவர்களும் பயணம் செய்ய வைக்கப்பட்டனர்.
2 பேருந்துகளில் ஏ.சி. இயங்கிய நிலையில் ஜன்னல்கள் மூடப்பட்டு இருந்தன. பின்னர் பஸ்களில் இருந்த அனைவரும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டனர். அதன்பின் நடத்திய சோதனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது.
ஆனால் பஸ் பயணிகளில் சிலருக்கு வைரஸ் அறிகுறிகள் தென்பட்டன. அவர்கள் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அருகில் அமரவில்லை. இதன் மூலம் மூடப்பட்ட அறைகளில் கொரோனா வைரஸ் விரைவாக பரவக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது.