3 உள்ளூர் வீரர்களை வைத்து ராஜஸ்தானை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ..!

ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தி, கொல்கத்தா அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முன்னேறியுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயால்ஸ் அணியும் மோதின.


அதன் படி நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷுப்மான் கில், சுனில் நரைன் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர்.

சுனில் நரைன் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் ராணா ஷுப்மான் கில் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
10-வது ஓவரின் கடைசி பந்தில் நிதிஷ் ராணா 22 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

சிறப்பாக விளையாடி வந்த ஷுப்மான் கில் 34 பந்தில் 47 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அந்த்ரே ரஸல் 24 ஓட்டங்களிலும், தினேஷ் கார்த்திக் 1 ஓட்டத்திலும் ஆட்டமிழக்க கொல்கத்தாவின் ரன் விகிதம் குறைய ஆரம்பித்தது.
6-வது வீரராக களம் இறங்கிய மோர்கன் 23 பந்தில் 34 ஓட்டங்கள் குவிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் அடித்தது.


ராஜஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்சர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில்18 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.அதன் பின் 175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த வண்ணம் இருந்ததால், இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் எடுத்து, 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக டாம் கரண் 54 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி மூன்று போட்டிகளில் 2 வெற்றி, 1 தோல்வி என மொத்தம் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தோல்வியடைந்த ராஜஸ்தான் அணி 2 வெற்றி, 1 தோல்வி என அதே 4 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணிக்கு இந்த தொடரில் இது முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.