ஹரீஸ் அவர்களை புனிதப்படுத்தி சிராஸ் அவர்களால் மருதூரில் எப்படி டெலிபோனுக்கு வாக்கு சேகரிக்க முடியும்?

என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கல்முனையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் அவர்களின் தற்போதைய நகர்வினை சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட பிழையான முடிவாகவே கணிக்க வேண்டியிருக்கிறது.

ஒரு மனிதனுக்கு பிறந்த ஊர் ஆணி வேர் போன்றது. நாம் சிரித்தால் ஊர் சிரிக்கும். நாம் அழுதால் ஊரே சேர்ந்து அழும். மண்ணின் நேசம் அப்படி. மு.கா. கட்சியும், அதன் தலைமையும் சாய்ந்தமருது மக்களின் வாக்கு பலத்தால் உருவான சிராஸ் அவர்களுக்கு உரித்தான மேயர் பதவியை கபளீகரம் செய்ய முற்பட்ட போது மருதூரே பொங்கியெழுந்தது. மண்ணின் மைந்தனுக்கு நேர்ந்த அரசியல் அநீதிக்கு நீதி கேட்டு மருதூரின் ஒவ்வொரு பிரஜையும் உடலால், உள்ளத்தால் வெகுண்டெழுந்தது வரலாறு.

இன்னும் அதன் நிமித்தம் நாம் பல தழும்புகளை,கசடுகளை சுமந்து வருகிறோம். ஆனால், நாம் நேசித்து மதித்த மகன் சமகாலத்தில் மண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் சற்று அவசரப்பட்டு விட்டாரோ என்று எண்ணத் தூண்டுகிறது. கல்முனையின் மேயராக அனைத்து மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றிக் கொண்டிருந்த அவரின் நேர்த்தியான அரசியலுக்கு ஆப்பு சீவிய துரோகத்தின் கூடாரங்களில் மீளவும் சங்கமித்திருப்பது அரசியல் தற்கொலைக்குச் சமம்.

ஒட்டுமொத்த ஊரின் பெரும்பான்மை மக்கள் வெறுக்கும் ஒரு அரசியல் இயக்கத்தின் கபடத்தனங்களை நேசத்திற்குரிய சிராஸ் இன்னும் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்பது வேடிக்கையானது. ஏலவே முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், யஹியா கான் போன்றோர் அக்கட்சியில் இருக்கத்தக்கதாக, சிராஸும் இக்கூடாரத்தில் இணைந்து கொண்டு எதிர்பார்க்கும் அரசியல் அங்கீகாரம் என்ன?

ஊரின் உணர்வுகளை நாடி பிடித்து அறிந்து கொண்டவராக முன்னாள் மேயர் சிராஸ் இருப்பாரானால் அவரினால் இப்படியொரு தீர்மானத்தை எடுத்திருக்க முடியாது. வளமான எதிர்காலமுள்ள நல்லதொரு அரசியல்வாதி தீர்க்கமான நேரத்தில் சறுக்கி, தன் அரசியல் பயணிப்பில் பிழைத்து போகும் தருணமாகவே இதனை பார்க்க முடிகிறது.

கல்முனை தொகுதி அரசியலில் ஹக்கீம் காங்கிரஸ், ஹரீஸ் காங்கிரஸ் என மு.கா. தரப்பினர் பிளவுபட்டு செயற்படும் இக்காலப் பகுதியில் சிராஸ் ஹரீஸ் தரப்பினருடன் கொண்ட ஐக்கியத்தின் பால் இத்தேர்தலில் சாய்ந்தமருதில் செயற்பட முனைந்திருப்பதாகவே அறிய முடிகிறது. மருதூர் மக்களின் 18,000 வாக்குகளும் தனக்கு தேவையில்லை என்பதாக அர்த்தப்பட கல்முனை மக்கள் மன்றில் (ஆஷாத் பிளாஷாவில்) உச்சஸ்தாயில் சத்திய முழக்கமிட்ட ஹரீஸ் அவர்களை புனிதப்படுத்தி சிராஸ் அவர்களால் மருதூரில் எப்படி டெலிபோனுக்கு வாக்கு சேகரிக்க முடியும்?

முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப்பினை அரசியல் களத்திற்குள் கொண்டு வந்ததாக உரிமை கோரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட தற்போதைய சாய்ந்தமருது மு.கா. முக்கியஸ்தர்களே ஹரீஸ் அவர்களின் நாமம் சொல்லி மருதூரில் அரசியல் செய்ய முடியாது என்பதை சூசகமாய் உணர்த்தி வரும் வேளையில் சிராஸ் எந்த பின்புலத்தில் இம்முடிவினை எடுத்திருப்பார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

எஸ்.ஜனூஸ்
29.07.2020