இன்று உலக புகைத்தல் எதிர்ப்பு தினம் !

s1t5swjqx6fennj1tvcz

புகைத்தலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மக்களை தெளிவூட்டும் வகையில் உலக புகைத்தல் தினம், உலக சுகாதார ஸ்தாபனத்தினூடாக, 1988 ஆம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

புகைத்தலினால் வருடாந்தம் ஆறு மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை புகைப்பிடிப்பவர்களை தவிர்ந்த அண்மையிலிருக்கும் மூன்றாம் தரப்பினரில்
வருடாந்தம் ஆறு இலட்சம் பேர் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இலங்கையில் புகைபிடித்தலுக்கு அடிமையாகியுள்ளவர்களை மீட்பதற்கான பல
வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபால கூறுகின்றார்.

மேலும் தொற்றா நோய்கள் அதிகரிப்பிற்கு பிரதான காரணமாக புகைப்பிடித்தல்
காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் புகையிலை உற்பத்தியை நிறுத்துவதே இந்த
வருடத்தின் புகைத்தல் எதிர்ப்பு தினத்திற்கான தொனிப்பொருளாக அமைந்துள்ளது.

அதற்கமைய இன்று முதல் எதிர்வரும் ஆறாம் திகதி வரை புகைத்தல் எதிர்ப்பு வாரமாக
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் பாடசாலை மற்றும் அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன்
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொலிஸ் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது.

கடந்த காலத்தில் புகைத்தலை ஒழிப்பதற்கான பல நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை ஒட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே
ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

புகைத்தலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுவூட்டும் வகையில் சட்டங்கள் அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

புகைத்தலை ஒழிப்பதற்கு அரசியல் மற்றும் சமூக ஒத்துழைப்புகள் அதிகளவில்
தேவைப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய இந்த விடயம் குறித்து குடும்பம், பாடசாலை, மத வழிப்பாட்டு ஸ்தளங்கள்
மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைப்புகள் என்பன பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் புகைத்தல் எதிர்ப்பு தினம் குறித்து பிரதமரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.