பன்மை திரளத் தன்மை சூழ்ந்த ஓர்மை யாத்திரீகன் ஆறுமுகன் – பஷீர் சேகு தாவூத்

 

பன்மை திரளத் தன்மை சூழ்ந்த ஓர்மை யாத்திரீகன் ஆறுமுகன்
************************************
1
நேற்று கொட்டகலை சீ.எல்.எப். மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஆறுமுகன் தொண்டமானின் உடலத்தை சந்தித்தேன். அசையாது படுத்திருந்த தீவிரமாக இயங்கிய யாத்திரீகனின் முகத்தைக் கண்டதும் அவருடன் பழகிய நாட்கள் வந்து என்னுள் அலை மோதின. அவர் தனது பாட்டனாரின் மறைவின் பின்னர் இளம் வயதில் தலைமையேற்று வழி நடாத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எனும் பேரியக்கம் பற்றிய நினைவுகள் நிழலாடின. காங்கிரஸ் தொழிற் சங்கம் மற்றும் அரசியல் கட்சி ஆகிய இரண்டு தடங்களில் பயணிக்கும் இரட்டை பணிகள் புரிகிற அமைப்பாகும்.

 

இவ்விரட்டை அமைப்புக்கு ஆறுமுகன் தலைமை தாங்கத் தொடங்கிய ஆரம்பகாலத்தில் 2003 ஆம் ஆண்டு இடம்பெற்ற அவ்வமைப்பின் வருடாந்த பேராளர் மாநாட்டுக்கு என்னை விருந்தினர்களில் ஒருவராக அழைத்திருந்தார். இவ்வருடம் காங்கிரசின் தலைவர் மற்றும் செயலாளர் என அதிகாரமிக்க இரண்டு பதவிகளுக்கும் ஆறுமுகன் ஒருவரே தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதற்காக கட்சி யாப்பும் மாற்றப்பட்டிருந்தது.
அமைச்சராகவும் பதவி வகித்தார். இம்மாநாட்டில் நான் பேசுகையில் தொண்டமான் அவர்களுக்கு கட்சியில் தலைவர் செயலர் ஆகிய இரண்டு பதவிகளையும் அரசாங்கத்தில் அமைச்சர் பதவியையும் மட்டுமல்ல கட்சியில் இன்னும் மூன்று பதவிகளை அதிகமாகவும் வழங்கலாம் ஏனென்றால் அவர் “ஒரு முகன்” அல்ல “ஆறு முகன்” அல்லவா என்றேன். கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் கட்சி நிர்வாகிகளும் ஒரு சேர கைகளைத் தட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியோடு சிரித்தார்கள்.பேசி முடித்து மேடையில் இருந்து இறங்கி வந்து நண்பர் ஆறுமுகனின் அருகல் அமர்ந்த போது எனக்கு தெரியும் இது “குத்திக்காட்டுண்ணு” என்று கூறி எனது இடுப்பில் அவரது முழங்கையால் செல்லமாக குத்தினார். காலப் போக்கில் அவரோடு இணைந்து செயல்படுகையில் ஆறுமுகன் உண்மையில் ஒரு பன்முக ஆளுமை என்பதை ஐயந்திரிபுற அறிந்துகொள்ள முடிந்தது. இதனை இலங்கைக்கே புரியவைத்துவிட்டு போயிருக்கிறார் “பன்மை திரளத் தன்மை சூழ்ந்த ஓர்மையான யாத்திரீகன் ஆறுமுகன்”.

2
பெரியவர் தொண்டமான் ஐயாவிடம் அரச அனுமதிப் பத்திரம் உள்ள சொட் கண் துப்பாக்கி இருந்தது.1976 ஆம் ஆண்டு ஒரு நாள் 12 வயது ஆறுமுகன், அப்போது பொலிஸ் அதிகாரியாகவும் பெரியவரின் அன்புக்குரியவராகவும் இருந்த கந்தசாமி ஐயாவிடம் வந்து ஐயா, துப்பாக்கியால் சுடுவதைப் பார்க்க எனக்கு ஆசை சுட்டுக் காட்டுங்கள் என்று கேட்டார்.கந்தசாமியார் துப்பாக்கியை எடுத்து SG தோட்டாவை புகுத்தி மரக்கிளையில் நின்ற காகம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தினார்.இதனைப் பார்த்த சிறுவன் “நானும் சுடணும் நானும் சுடணும்” என்று அடம்பிடித்து துள்ளினான்.

பெரியவரின் கண்ணுக்கு தெரியாதபடிக்கு உள்ள வேறு ஒரு இடத்துக்கு சிறுவனை அழைத்துச் சென்று துப்பாக்கியில் அதிர்வு குறைந்த வகையில் “பொறியும்” நாலாம் நம்பர் தோட்டா ஒன்றை நிரப்பினார் கந்தசாமி. மரத்தில் இருந்த ஒரு காகத்தை காட்டி இலக்கு வைத்து சுடுமாறு கூறி துப்பாக்கியை ஆறுமுகனிடம் கொடுத்தார். சரியாக காகத்தை இலக்கு வைத்த “தம்பி” துப்பாக்கி குழலை காகம் இருந்த இடத்திற்கு அப்பால் வலப்புறமாக ஓர் அடி அளவு நகர்த்தி “றிகறை” அழுத்தினார்.டுமீல், காகம் கரைந்தபடி எழும்பிப் பறந்தோடிச் சென்றது. ஏன் தம்பி நீங்கள் காகத்தை சுடாமல் தப்ப விட்டீங்க? என்று கேட்ட ஐயாவிடம் “காகம் பாவம், இப்ப அது அதுட கூட்டுக்கு பிள்ளைகள பார்க்க போயிருக்குமில்ல..” என்று சொன்னார் தம்பி ஆறுமுகன்.

இப்படிப்பட்ட அந்த இனிய ஓர் “உயிரபிமானியான” மனிதர் தனது 55 வயதில் “உயிர் என்ற ஒன்றைத் துறந்து மரணம் என்ற இன்னொன்றை அடைந்தாலும்”;அடிமைகள் போல வெள்ளையரால் அழைத்து வரப்பட்ட இழப்பதற்கு எதுவுமற்ற இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களிடம் இருந்த உறுதியான தலைமையை அவர்கள் தற்போது இழந்திருக்கிறார்கள் என்பது உண்மையாகும்.

சிறுத்தைகளின் குளவிகளின் எதிர்பாராத தாக்குதல் ஆபத்துகளுக்கு மத்தியில் முதலாளிகளின் ஏவல்களை நிறைவேற்ற கொழுந்து பறிக்கும் தொழிலாளிகளின் ஏவல்களை நிறைவேற்றப் பாடுபட்ட தொண்டுத் தொழிலாளியான தம்பி தொண்டமானை இயற்கை பறித்ததை எவரால்தான் தடுத்திருக்க முடியும்?

ஆறுமுகனின் இழப்பின் பின் மலையகத்து மக்களின் எதிர்காலம் பற்றிய கவலையும் சந்தேகமும் இருந்தாலும், காலத்துக்கு காலம் யுக புருஷர்களை தமக்கு தலைவர்களாக பெற்றுவந்த அந்த மக்கள் புதிய தலைவர் ஒருவரை விரைவில் பெறுவது நிச்சயமாகும். வாழுங்காலம் முழுவதும் வாழ்க்கைக்காக போராடுகிற, தொழிற் சங்க போராட்டங்களுக்கு பழக்கப்பட்ட தேர்ந்த போராளிகளான அம்மக்கள் தமக்கான புதிய தொண்டரை விரைவில் தெரிவார்கள்.

3
இன்றுவரை மலையக தொழிற் சங்கங்களில் பெரியது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசேயாகும். இலங்கையின் அரசியல் கட்சிகள் அனைத்தும்; விசேடமாக தமிழ் பேசும் அரசியல் அமைப்புகள் அனைத்தும் வரலாற்றின் காலச் சுழற்சியில் உடைவுகளையும், சிதைவுகளையும் சந்தித்துள்ளன.அழிவுகளையும் அடைந்துள்ளன. உடைப்பனுபவம் காங்கிரசுக்கும் ஏற்பட்டது. ஆயினும் இதனளவு பலமுள்ள, திடாகாத்திரமாக நிலை நிறுத்தப்பட்ட நிறுவன மயப்பட்டுள்ள தனி அமைப்பு வேறொன்று இன்றும் இல்லை எனலாம். சூழலுக்கமைவாக உத்திகளை பாவித்து கூட்டமைத்து அதிக நாடாளுமன்ற ஆசனங்களை பெறுவது வேறு நிறுவன ரீதியாக தனது காலில் நிலைத்து நிற்பது வேறாகும்.

கடந்த காலத்தில் இ.தொ.காங்கிரசுக்கு 220000 உறுப்பினர்கள் வரை இருந்தார்கள். தற்போது இது 85000 ஆக குறைவடைந்திருந்தாலும் புதிய சங்கங்கள் தனியாக கொண்டிருக்கும் உறுப்பினர் தொகை இன்னும் 30000 ஆயிரத்தை தாண்டவில்லை.

கொழும்பின் மையப்பகுதியில் சொந்தமாக பெரிய தலைமை அலுவலக கட்டிடத்தையும் மலையகத்தில் சொந்தமாக 51 கிளை அலுவலகங்களையும் கொண்ட ஒரே தொழிற்சங்கமும் அரசியல் கட்சியும் இ.தொ.கா.மட்டுமேயாகும்.

மலையகத்தில் காங்கிரஸ் அலுவலக உபயோகத்துக்காக கட்டிடங்களை வாடகைக்கு பெற முயற்சித்த போதெல்லாம் சொந்தக்காரர்கள் தர மறுத்துவிட்டனர். முதலாளிகள் தொழிலாளர்களை வன்முறையாளர்களாகக் கருதினார்கள்.தொழிற் சங்க போராட்டம் இடம்பெற்றால் தமது கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுவிடும் என்று முதலாளிகள் கருதியமையே மறுப்புக்கான காரணமாகும். இந்நிலைமையினால் காங்கிரஸ் சொந்தமாக நிலத்தை வாங்கி கட்டிடத்தை கட்டி காரியாலயம் நடத்தவேண்டி ஏற்பட்டது.

ஹற்றன் கொட்டகலையில் Congress Labor Foundation ( C.L.F ) அமைப்புக்கு பெரிய பயிற்சி நிலையக் கட்டிடம் சொந்தமாக உள்ளது. இக்கட்டிடத்தோடு சேர்ந்து பயிற்சியாளர்கள் தங்கி கற்பதற்கான ஹொஸ்டலும் ஏனைய இன்னும் சில கட்டிடங்களும் அந்த பெரிய நிலத்தில் அமைந்துள்ளன. இங்கு தையல், கணணி,மின்சாரம், மின்னுபகரணங்கள் திருத்தம் உள்ளிட்ட பல பயிற்சிகள் தோட்டத் தொழிலாளர்களின் ஆண், பெண் பிள்ளைகளுக்கு வழங்கப்படுகின்றன.
அடுத்த பரம்பரையை அடிமைத் தளையில் இருந்து அறுத்தெடுக்கும் முயற்சிக்கான பயிற்சி என்றே இதனைப் பார்க்கவேண்டும். இப்பயிற்சி மண்டபத்தில்தான் 30 ஆம் திகதி வைக்கப்பட்டிருந்த ஆறுமுகத்தாரின் உடலத்தை சென்று பார்த்தேன்.

4
தலைவர் ஆறுமுகன் அவர்களுக்கும் தந்தை செல்வாவுக்கும் வேறெந்த சிறுபான்மை அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இல்லாத ஒரு வரலாற்றுப் பெருமை இருக்கிறது. தந்தை செல்வா தலைவராக இருந்த போதும் தான் அமைச்சராகாமல் தனக்கு அடுத்த நிலையில் இருந்த செனட்டர் திருச்செல்வத்தை அமைச்சராக்கினார்.இவ்வாறே ஆறுமுகன் தொண்டமான் தான் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த முத்து சிவலிங்கத்தை ஒரு முறை கபினட் அமைச்சராக ஆக்கினார். விசேடமாக அரசாங்கங்களுடன் இணைந்திருந்த வேறு எந்த சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களும் இந்த புகழ் மிக்க தைரியமான முடிவை மேற்கொள்வில்லை. தொண்டமான் அவரது சமூக மக்களுக்குள் தான், அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்திருந்தமையும் அவர் மக்கள் மீதும், மக்கள் அவர் மீதும் பரஸ்பரம் கொண்டிருந்த செல்வாக்கும் நேசமுமே இந்த தைரியமான முடிவை மேற்கொள்வதற்கான காரணமாக அமைந்திருக்க வேண்டும்.

தான் வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருக்கத்தக்கதாக தனது கட்சியிலுள்ள வேறொருவர் அமைச்சரானால் தனது தலைமையை அவ்வமைச்சரால் பறித்துக்கொள்ள முடியாது என்ற நம்பிக்கைக்கையை ஆறுமுகனுக்கு அவர் செய்த தனது மக்களுக்கான வேலைத்திட்டமும் வழங்கியிருக்க வேண்டும்.இதனால் இவர் யுக புருஷராகிறார்.

5
தொழிலாளர் காங்கிரஸ் ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்பல்ல; ஆனால் தொழிலாளர்களின் தற்காப்புக்காக அரசின் அனுமதி பெற்ற துப்பாக்கிகளை பாவித்த தருணங்கள் ஒன்றிரண்டு உண்டு. 1987 இல் சில தேயிலைத் தொழிற்சாலைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. காங்கிரசின் சில சங்கத் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். அவ்வேளையில் தோட்டங்களில் தாக்குதல் நடாத்த வந்த ஆயுதம் தரித்தவர்களை அமைப்பின் உறுப்பினர்களாயிருந்த இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டுத் துரத்திய பல நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

இதொகா வரலாற்றில் பிரசாவுரிமைக்கான ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.மலையகத் தமிழர் இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்று என்று மதிக்கப்படத்தக்கதாக வளர்ச்சி பெறுவதற்கு அரசியல் தலைமையை வழங்கியுள்ளது. சிறுபான்மை இனங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசிடமும், பெரும்பான்மை மக்களிடமும் கொண்டு சேர்க்கும் கடமையைச் செய்துள்ளது.ஆதரவுக் குரலும், கரமும் கொடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவுனர் தலைவர் அஷ்ரஃப் அவர்களுடன் பெரியவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் மிகவும் நட்போடு பழகினார். தொண்டா- அஷ்ரஃப் ஒப்பந்தம் முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எவ்வளவு அக்கறையோடு இருக்கிறது என்பதற்கான உதாரணமாகும்.பெரியவரின் மரணத்தின் பின்னர் அவசரமாக சந்தரிக்கா அமைச்சரவைக்கு ஆறுமுகன் உள்ளீர்க்கப்பட்டவுடன் அஷ்ரஃப், புதியவரான அவருக்கு ஒரு வழிகாட்டியாக செயல்பட்டார். அஷ்ரஃபை ஆறுமுகன் அண்ணன் என்றே அழைப்பார்.

தம்பி ஆறுமுகன் வீடமைப்பு அமைச்சராக இருந்த போது எனது சிபாரிசில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 250 வீடுகளை அமைக்க ஒதுக்கீட்டைச் செய்தார்.எனக்கும் இவருக்குமான நட்பின் அனுபவம் நிறைய உண்டு. அதற்கு இது இடமும் தருணமுமல்ல என்பதால் தவிர்க்கிறேன்.

ஆறுமுகனின் இழப்பினால் துயருறும் மனைவி, மகன், மகள்கள்,மருமகன்கள்,சகோதரிகள் மற்றும் உறவினர்கள், தொழிலாளர்கள்,நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் அனைவருடனும் இணைந்து துயரத்தில் பங்குகொள்கிறேன்.

இலங்கையின் தமிழ் அரசியல் பரப்பில் பேராதிக்கம் செலுத்திய,மக்களால் நேசிக்கப்பட்ட இரண்டு தம்பிகள் வாழ்ந்தனர். அவர்கள் இருவரும் இப்போது இல்லை.

( கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் பெரியவர் தொண்டமானின் பின்னால் கந்தசாமியின் கையை பிடித்தவாறு நிற்கும் தலமுடி வளர்த்த பையன் ஆறுமுகனாகும்)

பஷீர் சேகு தாவூத்,

முன்னாள் அமைச்சர்