வெளியூர் தலைமைகளுக்கு வாரிக் கொடுத்து கைசேதப்பட்டதெல்லாம் போதும் -பேராசிரியர் இஸ்மாயில்

 

நடப்பதற்கு முன்னர் நடந்து களைக்க அவசியமில்லை – என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

கொரோனா நிலையில் தேர்தல் நடவடிக்கைகள் குறித்தான கருத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கால ஓட்டத்துக்கு இசைவாக நெழிந்து கொடுக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமை.

இதற்கு சமூகம், சமயம், கலாச்சாரம் அத்தனையும் உள்ளடங்க வேண்டும். வெறுமனே அரசியல் காலங்களில் மாத்திரம் சோடா கேஸ் போல கொந்தளிப்பது நிதர்சனமல்ல.

இன்று சிலர் அமர்ந்திருக்க நேரமற்று அலைவதை அவதானிக்க முடிகின்து. சமூகம் என்று வாயால் மாத்திரம் முழங்கிவிட்டு கனநொடியில் கைமாறு தேடுகின்றனர்.

அரசியல் விசித்திரமானது. அது சந்தர்பத்தின் சத ஓட்டத்தில் ஈடு கொடுப்பவை. தேவையான காலங்களில் மட்டும் மக்களை தேடுவது அரசியல்வாதியின் பண்பல்ல.

எந்நேரமும் மக்கள் மனங்களில் நம் சிந்தனை விதையேற வேண்டும். இதனையே செய்துவிட்டு நாங்கள் இன்று அமைதியாக இருக்கின்றோம்.

அரசியலுக்காக இனம், அரசியலுக்காக மதம், அரசியலுக்காக குரல் இதுவல்ல மக்கள் சேவை. மக்கள் சேவை என்பது தேவைகளுக்கு அப்பால் தேடிச் சென்று வழங்குவது.

இதுவரை காலமும் நாங்கள் மக்கள் தேவையறிந்து செயலாற்றினோம் என்பதை தேவையுணர்ந்த மக்கள் நினைவில் வைத்துள்ளனர்.

இது தொடரும் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

வெறுமனே சுய தேவை அபிவிருத்திகளை புடம்போட்டுக் காட்டியதில்லை எமது அரசியல் பயணமும், சேவையும் திகாமடுல்லையின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் தொடரும்.

தற்போதைய கால கட்டத்தில் மக்கள் உணர்ந்துள்ளனர். ‘யார் தேவை’ என்பதை.

அந்த உணர்வுகளின் வெளிப்பாடாக எமது தலைமை செயலாற்றும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை.

இம் முறை தேர்தலில் கூட எமது அணியான தேசிய காங்கிரஸின் குதிரைச் சின்னத்தில் தீர்க்க தரிசனமான வேட்பாளர்களே களமிறக்கப்பட்டுள்ளனர்.

அதற்காக அபிப்பிராயம் மக்களிடம் வரவேற்பாக உலா வருவதை அவதானிக்கின்றோம்.

இருந்த போதிலும் சமூக உணர்வோடு செயலாற்றுகின்ற முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்களின் இந்த அணிக்கு மக்கள் அங்கீகாரம் வழங்குவதும் உறுதியானது.

இனியும் எமது சமூகம் ஏமாறக்கூடாது. வெளியூர் தலைமைகளுக்கு வாரிக் கொடுத்து கைசேதப்பட்டதெல்லாம் போதும். உள்ளூரிலிருந்து உண்மையான தலைவனை தேர்ந்தெடுப்போம். அது நமது சமூகத்துக்கான சிறந்த அரசியல் அடையாளம்.

இதை உணர்ந்த பலர் எம்மோடு கைகோர்த்துள்ளனர். அவையனைத்தும் இரகசியமாக வீச்சுப் பொறிக்குள் உள்ளன.

தேர்தல் நெருங்கும் காலத்தில் அனைத்தும் பகிரங்கமாகும். வெற்றியின் உயிர் நாடி மக்கள் என்பதை இம்முறை நிச்சயம் தேசிய காங்கிரஸ் நிரூபிக்கும் – என்றார்.

– ஊடகப் பிரிவு –