முருங்கையில் நிறைந்துள்ள சத்துக்கள்….

 

முருங்கையின் இலை, ஈர்க்கு, பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் ஆகிய எல்லாப்பாகங்களும் மிகச்சிறந்த உடலுக்கு அன்றாட தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முக்கியமான உணவுப் பொருள் ஆகும். இந்த முருங்கை உணவானது பல்வேறு நோய்களை வராமல் தடுக்கக்கூடிய மற்றும் பலவகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய மருந்தாகவும் பயன்படுகிறது. “உணவே மருந்து, மருந்தே உணவு” என்னும் பழமொழியை முருங்கைக் கீரையை ஒப்பிட்டுக் கூறினால் மிகையாகாது.

முருங்கையில் நிறைந்துள்ள சத்துக்கள்:-

             முருங்கைக்கீரையில் நம் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ‘எ’, பீட்டா கரோட்டீன், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பீ’ காம்பளக்ஸ், டைட்டாஜீ பைபர், கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன், கொழுப்பு இதில் ஆல்கலாய்ட்ஸ், டேனின், அமினோ ஆசிட்ஸ், சர்க்கரையை குறைக்கிறது.

மேலும் இதற்கு ஆண்டி – ஆக்சிடன்ட், ஆண்டி – டயாபடிக், ஆண்டி – அத்திரோஜெனிக், ஆண்டி – ஹைப்பர் டென்சிவ், ஆண்டி – மைக்ரோபியல், ஆண்டி – இன்பிள மேட்ரி, ஆண்டி – பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் செய்கைகள் உடையது. மேலும் இதில் முக்கியமான அமினோ அமிலங்கள் உள்ளன. அவை:

திரியோனைன், வாலைன், மிதியோனைன், லியூசின், ஐசோலியூசின், பீனைல் அலைனைன், ஹிஸ்டிடீன், லைசின், அர்ஜினைன்.
இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்கிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. கொழுப்பு அளவை குறைக்கிறது. ரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

முருங்கையின் பயன்கள்:-

                    ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி இதனுடன் 5 பல் பூண்டு, 5 மிளகு மற்றும் வெருகடியளவு சீரகம் பொடித்துப்போட்டு தினமும் மதிய உணவு வேலையிலே சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட பல விதமான நன்மைகளை உடலுக்குக் கொடுக்கிறது. ரத்தசோகை உள்ளவர்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடலை சீராக வைத்துக் கொள்ளும். மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலி குணமடையும்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து பருகிவந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதுடன் பிரசவமும் சுகப்பிரசவமாகும். முடி நீண்டு வளரும். நரைமுடி குறையும். தோல் வியாதிகள் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் சூடு தணியும் மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்கும். முருங்கைக்கீரையுடன் வேர்க்கடலை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுவடையும். புரதச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவாகும்.

முருங்கையீர்க்கு:- முருங்கையீர்க்கை எடுத்துக் கொண்டு இதனுடன் மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து கொதிக்க சூப் செய்து குடிக்க காய்ச்சல், கைகால்வலி, மூட்டுவலி, ஆஸ்துமா, மார்புசளி, தலைவலி ஆகியவை குணமாகும்.

முருங்கைக்காய்:- முருங்கைக்காயுடன் மிளகு, ஓமம், பெருங்காயம்-1 சிட்டிகை சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வர செரிமான கோளாறுகளான மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப்புண் நீங்கும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.

முருங்கைப்பூ:- முருங்கைப்பூ ஒரு கைப்பிடியளவு எடுத்துக்கொண்டு 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி காலையில் உணவிற்கு முன் சாப்பிட்டு வர ஆண்மை தன்மையை அதிகரிக்கும். ஆண் மலடு நீங்கும். மேலும், கண் எரிச்சல், உடற்சூடு ஆகிய வற்றை குணமாக்கும், கண்பார்வைத் திறனை அதிகரிக்கும்.

மேலும், முருங்கைப்பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்திவந்தால் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் இருப்பவர்களுக்கு நாட்டம் உண்டாகும். இதை இயற்கையான வயகரா எனக் கூறலாம்.

முருங்கைப்பட்டை:- முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம்குறையும்.

முருங்கைவேர்:- முருங்கைவேர் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தினால் விக்கல், இரைப்பு, உடல் வலி, கைகால்வலி குறையும்.

முருங்கைப்பிசின்:- முருங்கை பிசின் நீற்ற விந்துவை இறுக்கும். உடலுக்கு அழகு உண்டாகும். விந்துவைப்பெருக்கும். சிறுநீரை தெளிய வைக்கும். 

முருங்கையின் எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் நமக்கு பயன் தருகிறது.

முருங்கைக்கீரையின் அற்புதங்கள்

மற்ற கீரைகளில் உள்ள இரும்புச்சத்தினை விட 75 சதவீத அதிக சத்து முருங்கை கீரையில் உள்ளது. ஆரஞ்சைவிட 7 மடங்கு விட்டமின் ‘சி’ உள்ளது.

பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம் உள்ளது. கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு விட்டமின் ‘ஏ’ உள்ளது. வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் உள்ளது. தயிர் பாலாடைக் கட்டியில் உள்ளது போல 2 மடங்கு புரதச்சத்து உள்ளது. 

முருங்கை மருந்தாகும் விதம்:- முருங்கை இலைச்சாற்றுடன் 10 மிலி சம அளவு எலுமிச்சை சாறு சேர்த்து அன்றாடம் காலை வேளையில் குடித்து வருவதால் சத்துக்குறைபாடு, ரத்தசோகை, இருமல், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோலின் வறட்சி குணமாகும்.

முருங்கை இலைச்சாற்றுடன் தேனும் இளநீரும் சேர்த்துக் குடிப்பதால் இழந்த உடல் ஆரோக்கியமும் பலமும் திரும்பக் கிடைக்கும். நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தவுடன் முருங்கைக் கீரையோடு இரண்டு பல் பூண்டு, சிறிது மஞ்சள், உப்பு, மிளகு இவைகளை சேர்த்து அரைத்து உள்ளுக்கு சிறிது கொடுப்பதுடன் கடிப்பட்ட இடத்தில் சிறிதளவு தடவிவர நஞ்சு முறியும். புண்ணும் விரைவில் ஆறும்.

முருங்கைப்பூ பிஞ்சான உடன் சேகரித்து தோலோடு சமைத்து சாப்பிட்டு வர மிகுந்த உடல் வெப்பம் தணிந்து ஆண்மை அதிகரிக்கும். முருங்கைப் பட்டையை இடித்து சாறெடுத்து அதனுடன் குப்பைமேனி சாறு சேர்த்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி சொறி, சிரங்கு, கரப்பான் ஆகிய தோல் நோய்களின் மீது பூசிவர விரைவில் குணமாகும்.

கண் நரம்புகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தூங்கச் செல்லும் முன் முருங்கைக் கீரைச்சாறும் தேனும் கலந்து கொடுத்தால் பார்வை கூர்மை பெறும்.