ஐந்தாவது முறையாகவும் செப் ப்ளாட்டர் ‘பிபா’ தலைவரானார் !

bb8be7fa-b7d0-44e0-bbbd-c634c89b6b34-620x372

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) தலைவராக 5ஆவது முறையாக செப் பிளாட்டர் தேர்வு செய்யப்பட்டார்.      

சுவிட்சர்லாந்து தலைநகர் ஜூரிச்சில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘பிபா’ தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், தற்போதைய தலைவரான சுவிட்சர்லாந்தின் செப் பிளாட்டர், (79 வயது), மீண்டும் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஜோர்டான் இளவரசர் அலி பின் அல்-– ஹ_சைன், 39, களம் கண்டார்.       

கடந்த 17 ஆண்டுகளாக ‘பிபா’ தலைவராக ஆதிக்கம் செலுத்தி வரும் பிளாட்டருக்கு இம்முறை கடும் எதிர்ப்பு காணப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இவரது பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தன. 

வரும் 2018இல் ரஷ்யா, 2022ல் கத்தாருக்கு உலக கிண்ண கால்பந்து தொடரை நடத்த அனுமதி தந்ததில் முறைகேடு, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் வழங்கியதில் ரூ. 984 கோடி வரை ஊழல் நடந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக, ‘பிபா’ நிர்வாகிகள் 7 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.       

இந்த பரபரப்பான சூழலில் நேற்று ‘பிபா’ தலைவர் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 209 உறுப்பு நாடுகளில், முதல் சுற்றில் 140 வாக்குகள் பெறுபவர் வெற்றி பெறலாம். ஆனால், பிளாட்டருக்கு 133 வாக்குகள் தான் கிடைத்தன. 

ஜோர்டான் இளவரசர் அலி பின் அல்– ஹ_சைன் 73 வாக்குகளை பெற்றார். இதையடுத்து இரண்டாவது சுற்று ஓட்டெடுப்பு நடக்க இருந்தது. இதற்கு முன் ஹ_சைன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து பிளாட்டர் ‘பிபா’ தலைவராக 5வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இவர் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார்.