பாணந்துறை சரிக்கமுல்லையில் சிங்களக் குழுவொன்றுக்கும் முஸ்லிம் குழுவொன்றுக்குமிடையில் நேற்றிரவு வன்முறை கட்டவிழ்ந்திருக்கிறது.இதனைச் சிங்கள- முஸ்லிம் கலவரம் என்று சிலர் அழைக்கிறார்கள்.
கண்டியில் இருந்து ஒரு முஸ்லிம் இளைஞர் சரிக்கமுல்லையில் இருக்கும் உறவினரின் வீட்டுக்கு வந்துள்ளார். இவர் தனது உந்துருளியை பின்னோக்கி எடுக்கையில் அது சிங்களவர் ஒருவரின் முச்சக்கர வண்டியை முட்டியுள்ளது. இச்சம்பவத்தால் அவ்விடத்தில் வாய்த்தர்க்கமும்,சிறிய கைகலப்பு ஒன்றும் நடந்துள்ளது. கோபம் அடங்காத அந்த சிங்களவர் இடத்தைவிட்டு சென்று சிறிது நேரத்தில் சிங்களவர்கள் குழுவொன்றை அழைத்துவந்து முஸ்லிம்களின் சில வீடுகளைத் தாக்கியுள்ளார்.கண்டி இளைஞரின் உறவினர்களின் வீடுகள் அதிகமாகச் சேதமடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இலங்கையில் சிங்களவர்கள் அதிகமாகவும் செறிவாகவும் வாழும் பகுதிகளை அண்டி குறைவாகவும் ஐதாகவும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களில் பங்குபெறும் சிங்கள தனிநபர்கள் அல்லது சிங்களச் சிறு குழுவினர் வெளியிலிருந்து அதிகமான சிங்களவர்களைக் கொண்டு வந்து முஸ்லிம்களைத் தாக்கும் உத்தி பரவி வருகிறது. இதுதான் திகணவிலும் கடந்த வருடம் நடந்தது. அளுத்கமவிலும் வெளியிலிருந்து “கொண்டுவரப்பட்ட” சிங்களவர்களே தாக்குதல்தாரிகளாக இருந்தனர்.இந்த நிலைமை இன்னும் பல தசாப்தங்களுக்கு தொடரலாம். சுதந்திரத்துக்குப் பின்னரான ஏழு தசாப்த காலம் தமிழர்களை ஒடுக்குகிற சிங்கள மேலாதிக்க அரசியலால் உள்நாட்டு யுத்தம் உட்பட இலங்கையர் அனுபவித்த துயரங்கள் எண்ணிலடங்காது.
பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சாதாரண மக்கள் சிறுபான்மை இனம் மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்களைக் காட்டிலும் தாம் மேலானவர்கள்,நாட்டின் உரித்தை ஒட்டுமொத்தமாகக் கொண்டிருப்பவர்கள் என நம்பவைக்கப்பட்டுள்ளார்கள். தாம் மற்றவர்களை மிரட்டலாம்- வன்முறை செய்யலாம், அடக்கலாம் என்ற கருத்துருவம் கடந்த எழுபது வருடங்களுக்கு மேலாக செய்யப்பட்டுவரும் சிங்களப் பெரும்பான்மைவாத அரசியலால் சிங்கள மக்களுக்குள் உறுதியான ஒரு பெரு நம்பிக்கையாகவே விதைக்கப்பட்டுவிட்டது.
2009 ஆம் ஆண்டு இனப்போர் சிங்களவர் சார்பாக முடிவுக்கு வந்த பின்னர் மேற்சொன்ன நம்பிக்கை பலமடைந்திருப்பதன் வெளிப்பாடாக தெற்கில் முஸ்லிம்கள் நிம்மதியான வாழ்வை இழந்து வருகிறார்கள்.எது எப்படி நடந்தாலும் நமது வியாபாரம் செழிப்பதற்கு தடையில்லாவிட்டால் போதும் என்று முஸ்லிம் முதலாளிகள் நினைக்க, என்னதான் செய்யலாம் “இதுதான் நமக்கு அமைத்த வாழ்வு” அடங்கி வாழ்ந்தாலாவது நமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறதா என்று பார்ப்போம் என சாதாரண முஸ்லிம் குடும்பஸ்தர்கள் நினைக்க,சில முஸ்லிம் இயக்க இளைஞர்கள் மத ரீதியாக சிந்தித்து கொதிக்க மெல்லென ஆபத்தை நோக்கியே நகர்கிறது வாழ்வு.
குழுவாக நிற்கும் மதரசா மாணவர்கள் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை அசைத்து மகிழ்வது போல படம் பிடித்து ஊடகங்களில் வெளியிட்டும், மஸ்ஜித்களில் தேசியக்கொடியை பறக்கவிட்டும், தேசப்பற்று தேனினும் இனிப்பானது என்று ‘பயான்’ செய்தும் முஸ்லிம்கள் சிங்கள பௌத்தர்களுக்கு இணையான தேச பக்தர்கள் என்று பெரிதாக நிரூபிக்க முற்பட்டபோதும் இவை எடுபடவேயில்லை என்பதை சரிக்கமுல்ல சம்பவம் நிரூபித்து நிற்கிறது. ஒரு இளம் மௌலவி தேசப்பற்று ஹறாம், தேசியக்கொடி ஏற்றப்படும்போது எழுந்து நிற்பது ஷிர்க், தேசியக்கொடிக்கு முஸ்லிம்கள் மரியாதை செய்யவேண்டாம் என்றெல்லாம் ஆக்ரோஷமாகப் பேசி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியிருந்ததை அண்மையில் பார்த்தேன், கேட்டேன். ஆயிரம் மௌலவிகள் தேசப்பற்றுத் தேனைக் காதுகளில் ஊற்றிறாலும்; இதனைவிடவும் ஒரு சில மௌலவிகளின் எதிர்க் கருத்துகளே சிங்களவர்களின் காதுகளை விரைவாகவும் அதிகமாகவும் சென்றடைகின்றன.இவ்வாறே, புதிய சில மௌலவிகள் இப்றாஹீம் (அலை) அவர்கள் கஹ்பதுல்லாஹ்வில் இருந்த சிலைகளை எல்லாம் உடைத்துவிட்டு தலைமைக் கடவுள் சிலையின் கழுத்தில் கோடரியைத் தொங்கவிட்டது பற்றியும், முகம்மது நபி (ஸல்) அவர்கள் சிலைகளைத் தகர்த்தமை பற்றியும் இச்செயல்கள் சொர்க்கத்தைப் பரிசளிக்கும் என்றும் செய்கின்ற பயான்கள் சில முஸ்லிம் இளைஞர்களின் மூளைகளையாவது சலவை செய்கின்றது என்பதையும் கணக்கில் எடுக்கவேண்டியுள்ளது.இவை அனைத்துக்கும் சமாந்தரமாக இலங்கையில் உள்ள அனைத்து இன, மதங்களையும் சார்ந்த- சேர்ந்த அரசியல்வாதிகளின் அரசியலுக்கு இன, மதக் கலவரங்கள் மற்றும் துவேசமான நடவடிக்கைகள் என்பன வசதியாகவும் வாய்ப்பாகவும் அமைந்திருப்பதால், இவற்றிற்கு அரசியல்வாதிகளின் ஊமை ஆசீர்வாதமும் கிடைக்கின்றது என்பதையும் கருத்தில் எடுக்கவேண்டும்.
மதத்தலைவர்களிடமும், அரசியல் தலைவர்களிடமும் கேள்விக் கணைகளைத் தொடுக்காத தலைமுறை நவீன அடிமைச் சமுதாயத்தின் பிரதிநிதிகளாகும். அந்தக் காலத்தில் சில மௌலவிகள் வந்து நாட்டுப்பற்று ஈமானில் பாதி என்றும் சுத்தம் ஈமானில் பாதி என்றும் அவர்களது பயான்களில் ஒரு சேர எங்களிடம் சொன்னார்கள்.இவை இரண்டும் சேர்ந்தே ஈமானின் 100% ஆகிறதே; அப்படியானால் “லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸூலுல்லாஹ்” என்ற கலிமாவும் ஆமன்துபில்லாஹி வமலாயிகதிஹி வகுத்புஹி வறஸூலிஹி வல்எவ்மில்ஆஹிர் வல்கத்றிஹி ஹைறிஹி வஷர்ரிஹி மினல்லாஹிதஆலா என்பதுவும் ஈமானில் எங்கே இருக்கின்றன என்று நாங்கள் கேட்கத் தவறிய கேள்வியின் விளைவையே இன்று எமது மக்கள் அநுபவிக்கின்றனர்.இவ்வாறே அரசியல் தலைவர்களிடமும் எங்கள் பரம்பரை காட்டிய கண்மூடித்தனமான விசுவாசம் நம்மைக் கவிழ்த்துவைத்த குடமாக ஆக்கிவிட்டது என்பதை இக்காலத்தில் உணர்கிறோம்.
பாணந்துறை எனும் பெரும்பான்மை சிங்களப் பிரதேசம் இலங்கை யின் ஏனைய பெரும்பான்மை் சிங்களப் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில்; அது விசேட தன்மைகள் சிலவற்றை உள்ளடக்கியுள்ளமையை ஆராய்ச்சி மாணவர் அறிவர். இப்பிரதேசம் 50% சிங்கள பௌத்தர்களையும் 50% சிங்கள கிறிஸ்தவர்களையும் உள்ளடக்கியுள்ளது.இப்பிரதேசம் வரலாற்று ரீதியாக இலங்கையின் முதலாளித்துவத்தை துவக்கிவைத்த பிரதேசமாகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நிகழ்ந்த “பாணந்துற வாதய ” என்ற பௌத்த கிறிஸ்தவ விவாதத்தில் பௌத்தர்கள் பெற்ற வெற்றியே இலங்கையில் பௌத்த பெரும்பான்மையை மட்டுமல்ல பௌத்த மதத்தின் ஆன்மீக நம்பகத்தையும் நிலைநாட்டியது.இவ்வாத வெற்றியே திரு: ஓல்கொட் அவர்களை பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வந்து நவீன பௌத்தத்தை உருவாக்கியது.
இவ்வாதத்தில் பௌத்தம் சார்பாக தலைமை தாங்கிய மீகெட்டுவத்த குணானந்த தேரர் கிறிஸ்தவம் சார்பாக பங்குபற்றிய சைமன் த சில்வா உட்பட்ட பல தந்தையர்களை தனது வாதத் திறமையால் வென்றமையை இன்று நினைவுகூற சிங்கள பௌத்த தீவிரவாதிகள் எவருமில்லை; அவ்விவாதத்துக்கு கண்டி உட்பட நாடு முழுவதிலும் இருந்து எல்லா மத மக்களும் ஒன்றாகக் கூடியிருந்த போதும் அங்கு வன்முறையின் வாசனைகூட இருக்கவில்லை என்பதே நவீன சிங்கள பௌத்த தீவிரவாதிகள் அவரை மறந்ததற்கான காரணமாக இருக்கலாம். இவ்விடத்தில் முக்கியமான கேள்வி சரிக்கமுல்லையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட நிகழ்வில் சிங்கள கிறிஸ்தவ இளைஞர்கள் கலந்திருந்தார்களா என்பதேயாகும்.
நேற்றைய பௌர்ணமி தினம் காலி ஜப்பானிய பன்சலைக்கு சென்று அதன் தேரர் அஸாமி அவர்களைச் சந்துத்து கலந்து பேசினேன்.இவர் பௌத்தத்தின் மகயோஹோஜி நிபோ(f)ன்சன் பிரிவைச் சேர்ந்தவராவார். இவர் பேசியதன் இரத்தினச் சுருக்கம் ” இலங்கை பௌத்தம் சிங்கள பௌத்தமாகத் தன்னை அடையாளப்படுத்துகிறது. அது சர்வதேச பௌத்தமாகத் தன்னை முன்னிறுத்துமாக இருந்தால் இலங்கையை வெல்ல யாருமில்லை” என்பதாகும்.
போலியாக நடப்பட்ட அறிவு வேலிகளை மேவி கேள்விகளை விதைப்போம்! புரியும்படியான பதில்கள் கிடைக்காதுவிடின் மேலும் தேடுவோம்!! வாசிப்பினூடு வாழ்வோம்!!!
ஜப்பானிய தேரர் அஸாமி அவர்களுடன் நான் காணப்படுதலை படத்தில் காணலாம்.
Basheer Segu Dawood
Former Minister