கலாபூஷணம் மீரா. எஸ்.இஸ்ஸடீன்
தலைவரின் ஊடக இணைப்பாளர்.
ஒலுவிலிருந்து கொழும்புக்கு புறப்படுவதற்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்வை எனது முன்னைய பதிவில் நான் தவற விட்டுவிட்டேன். அதனை இங்கு தலைவரின் நேசத்திற்குரியவர்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன்.
தலைவர் அஷ்ரஃப் அவர்களை சந்திப்பதற்காக நிந்தவூர் பிரதேசத்திலிருந்து பல பிரமுகர்கள் ஒலுவில் சுற்றுலா விடுதிக்கு வந்திருந்தனர்.
நிந்தவூரின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள்,அரசியல் முன்னெடுப்புகள் தொடர்பாகவும் மற்றும் இன்னோரன்ன விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இச்சந்தர்ப்பத்தில் பிரதிநிதிகள் தரப்பிலிருந்த ஒருவர் கட்சியின் அடிவேர்களில் ஒன்றான, தலைவரின் இயந்திரமாக இரவு பகலாக இயங்கிக் கொண்டிருந்த சகோதரர் எம்.ரி.ஹஸனலி தொடர்பாக தலைவரின் நிலைப்பாடு என்னவென சூசகமாக அறிந்து கொள்ளும் பொருட்டு ஹஸனலியின் பெயரை உச்சரித்து பேசத் தொடங்கினார்.குறித்த கட்சிப் போராளியை இடைமறித்த தலைவர் அஷ்ரப் அவர்கள், ஹஸனலி பற்றி என்னிடம் தயவு செய்து ஆலோசனை கூற வராதீர்கள் உங்களைப் போன்றுதான் நானும் அவர்மீது கவனமாக இருக்கின்றேன்.எனது அரசியலும்,அதிகாரமும் ஹஸனலியுடையதைப் போன்றது என மிகத் தெளிவாக குறிப்பிட்டார்.
பிரதிநிதிகள் மத்தியில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் களைகட்டி இருந்த வேளை பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டிருந்த முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளரும் தற்போதைய தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பீடாதிபதிகளில் ஒருவருமான எனது நண்பர் ஜப்பார் தலைவரை நோக்கி –
சேர் விகிதாசார தேர்தல் முறையின் பிரகாரம் நடைபெறுகின்ற இத்தேர்தல் முறைமைகளின்படி ஒரு கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெறுகின்ற ஒருவர் மரணித்தால் அல்லது பதவியிழந்தால் பட்டியலிலுள்ள அடுத்தவருக்குத்தான் சந்தர்ப்பம் கிடைக்கும்.இம்முறை நாம் கதிரைச் சின்னத்தில் சந்திரிக்காவின் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போகின்றோம்.முஸ்லிம்களில் நமது பிரதேசத்தைச் சேர்ந்த மூவருடைய பெயர்கள் மாத்திரம்தான் பட்டியலில் இடம்பெற்றுள்ளன| என்று கூறிய மாத்திரத்தில்
ஜப்பாரைப் பற்றி அவருடைய கல்வியைப் பற்றி விசாரித்துக் கொண்ட தலைவர்,
நான் படுகொலை செய்யப்படுவேன் அல்லது மரணித்துவிடுவேன் என்றா நீங்கள் கூற வருகின்றீர்கள்?.
சேர்!, சேர்! ……….இல்லை சேர் தேர்தல் முறைகளைத்தான் நான் கூறவந்தேன்’ என்று தலைவரைப் பார்த்துக் கூற,இருவருமே மிகுந்த சங்கடத்துக்கு உள்ளாகி விட்டார்கள்.
இச்சந்தர்ப்பத்தில் தலைவர் அவரது மொபைலில் யாருக்கோ அழைப்பு விடுக்கிறார்.பதில் ஏதும் கிடைக்கவில்லை.மீண்டும் ஜப்பாரை நோக்குகிறார்.
ஜப்பார் நான் இன்று அவசரமாக கொழும்பு செல்லப் போகின்றேன். சென்று வந்து உங்களின் கேள்விக்கான விடையை கூறுவேன் என்றார்’
தலைவரின் மரணத்திற்குப் பின்னர் இந்த உரையாடல் பலராலும் பேசப்பட்டது.யார் எதைப் பேசினாலும் மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்று எந்த ஒரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும்.மரணத்தை தேடி நீங்கள் வருவீர்ககள்.என்ற இறை வசனங்கள் எல்லாம் அன்புப் போராளிகளின் கண்ணீரையும் கவலைகளையும் தொண்டைக்குழிக்குள் புதைக்க வேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோளாகும்.
குறிப்பு 1
தலைவரின் மரணத்தின் பின்னர் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்துக்கான அபேட்சகர் பட்டியலில் தலைவரது பாரியார் உள்வாங்கப்பட்டார்.
தேர்தல் ஒன்றில் போட்டியிட இருந்த அபேட்சகர் ஒருவர் மரணமடையும் பட்சத்தில் வேறு ஒரு நபரை பட்டியலில் உள்வாங்குவதற்கு தேர்தல் சட்ட விதிகளில் ஏற்பாடுகள் உள்ளன.
குறிப்பு 2
2000ஆம் ஆண்டு நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஜனாபா பேரியல் அஷ்ரஃப், மர்ஹூம்.யூ.எல்.எம்.மொஹிடீன், அல்ஹாஜ்.ஏ.எல்.எம்.அதாஉல்லா ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகவும் தலைவர் ஆரம்பித்த மற்றுமொரு கட்சியான ஜாதிக சமகி பெரமுன சார்பாக தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க உட்பட நால்வர் வெற்றி பெற்றனர்.
தலைவர் கதிரைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு முன்வந்தமைக்கான காரணம் பற்றி மீண்டும் ஒரு குறிப்பில் பதிவிடுகின்றேன்.