முப்படையினர் தொடர்பான தகவல்களை நீதிமன்றங்களுக்கு வழங்க வேண்டாம் : ஜனாதிபதி உத்தரவு

நீதிமன்றங்களில் தற்போது விசாரணைகளில் உள்ள காணாமல் போனோர் மற்றும் கொலை சம்பந்தமான வழக்குகளில் முப்படையினர் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த 28ம் திகதி தனது இல்லத்தில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பொன்றின் போது ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ் துறை அதிகாரிகள் என பலரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஊடகவியலாயர் லசந்த விக்ரமதுங்க கொலை, பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீத் நெயார் கடத்தப்பட்டமை, உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்டமை உள்ளிட்ட பல வழக்குகளில், விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, முப்படையினர் தொடர்பான தகவல்கள் தேவைப்படுவதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

இந்த விசாரணைகளுக்குத் தேவையான தகவல்களை வழங்குமாறு நீதிமன்றங்களும், முப்படைகளின் தளபதிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கின்றன. எனினும், இன்னமும் தகவல்கள் வழங்கப்படவில்லை.இது தொடர்பாக பொலிஸார், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியதை அடுத்தே, ஜனாதிபதி தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளதுடன், ஜனாதிபதி இந்த உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.