தென்னிந்தியா மற்றும் பலாலிக்கு இடையில் விரைவில், குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.இது குறித்த தொடர்ந்தும் பேசிய அவர், “தற்போது வெளிநாட்டு பயணிகள் வடக்குக்கு பயணங்களை மேற்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
இதன் காரணமாக, தென்னிந்தியாவுடன் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு இணைப்பை ஏற்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் ஒரு குறைந்த கட்டண விமான சேவை தென்னிந்தியாவில் இருந்து பலாலிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.மிக விரைவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம், இந்திய சுற்றுலாப் பயணிகள் வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் இலகுபடுத்தப்படும்.
அத்துடன் தற்போது விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பல விமான நிலையங்கள், உள்நாட்டு விமான நிலையங்களாக மாற்றியமைக்கப்படவுள்ளன. மட்டக்களப்பு விமான நிலையம் ஏற்கனவே பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.இதேவேளை, ஹிங்குராங்கொட விமான நிலையமும் பயணிகள் போக்குவரத்துக்காக கூடிய விரைவில் திறந்து விடப்படும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.