சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரட்னவின் நிலைப்பாடு அரசாங்கத்தின் அதிகார பூர்வ நிலைப்பாடா என கூட்டு எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.கூட்டு எதிர்க்கட்சியினால் இன்றைய தினம் பொரளை என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்துக்களை வெளியிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு தெரிந்தே வடக்கில் மக்கள் அழிப்பு வாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தெற்கின் அமைச்சர்கள் படைவீரர்களை இழிவுபடுத்தி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த படைவீரர்களை கொண்டாடுவதற்காக நாடாளுமன்ற மைதானத்தில் சிறிய மூன்று கூடாரங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.
இதில் வெறும் கலாச்சார நிகழ்வு ஒன்று மட்டுமே நடாத்தப்பட உள்ளமை வருத்தமளிக்கின்றது.படையினரின் கைகளில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், புலிகளின் நினைவேந்தல் நடவடிக்கைகளை நியாயமானது எனவும் சுகாதார அமைச்சர் வெளியிட்ட கருத்து அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடா என ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டுக்கு அறிவிக்க வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியினர் கோரியுள்ளனர்.இந்த ஊடக சந்திப்பில் திலும் அமுனுகம, சிசிர ஜயகொடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.