•ஏ.எல்.அகமட்
கிழக்கு மாகாண கல்வியமைச்சு வெளியிட்டுள்ள தொண்டர் ஆசிரியர்களை நிரந்தர நியமனம் செய்யும் பட்டியலில் குளறுபடிகள் மற்றும் தெளிவின்மைகள் காணப்படுவதாக கல்வியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே இவற்றை திருத்தியமைத்து வெளிப்படைத் தன்மையுடன் அனைத்து விபரங்களும் அடங்கிய பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் பல வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களை நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்வதற்கு பலரும் முயற்சிகளை மேற்கொண்டனர். முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவருமான எம்.ரி.ஹசன்அலியும் அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இந்நிலையில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தமிழ், சிங்கள மொழிமூலத்தில் தகுதியுள்ள தொண்டர் ஆசிரியர்கள் 456 பேரின் பெயர்ப்பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாகும். இதற்காக மாகாணத்திலுள்ள சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் உள்ளடங்கலாக முழுக் கல்விச் சமூகமும் நன்றிகளை தெரிவிக்கின்றது. இருப்பினும் அந்த பெயர்ப்பட்டியலில் காணப்படுகின்ற தெளிவற்ற தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக இது பற்றி நன்கு அறிந்த சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான ஒரு பட்டியல் வெளியிடப்படுவதாக இருந்தால் அந்த தொண்டர் ஆசிரியர் எந்தப் பாடசாலையில் எந்தக் காலப்பகுதியில் பணியாற்றினார் என்பதையும் அவர் என்ன பாடத்தை போதித்தார் என்பதையும் கட்டாயமாக குறிப்பிட்டாக வேண்டும். அப்படியென்றால்தான் குறித்த பாடசாலைச் சமூகமும் வலயக் கல்விப் பணிமனையும் அதற்கெதிராக ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அதனை முன்வைக்கலாம். பாதிக்கப்பட்ட போதனாசிரியர்கள் மேன்முறையீடுகளைச் செய்யவும் முடியும்.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள பெயர்ப்பட்டியலில் குறித்த நபரின் பெயரும் தனிப்பட்ட முகவரியும் தே.அ.அட்டை இலக்கமுமே குறிப்பிடப்பட்டுள்ளது. பாடசாலையின் முகவரியோ, அவரது பாடமோ குறிப்பிடப்படவில்லை என்பது கவனிப்பிற்குரியது. எனவே தொண்டராசியர் நியமனத்திற்காக கருத்தில் எடுக்கப்பட்ட காலப்பகுதியில் யுத்தம் போன்ற காரணங்களால் மூடப்பட்டிருந்த, இயங்காத பாடசாலைகளில் கற்பித்ததாக சிலரது பெயர்களும்;, குறிப்பிட்ட சில பாடசாலைகளில் அக்காலப்பகுதியில் இல்லாத ஒரு பாடநெறியை கற்பித்ததாக வேறு சிலரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தென்படுகின்றது என்று விடயமறிந்தோர் கூறுகின்றனர்.
இது கல்வியலாளர்கள் மற்றும் இதில் உள்வாங்கப்படாத தொண்டர் ஆசிரியர்கள் மத்தியிலும் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. (அப்போது) இயங்காத பாடசாலை ஒன்றின் பெயரிலும், இல்லாத பாடத்திற்காகவும் முறைகேடான முறையில் பொய்யான ஆவணங்களின் மூலம் நியமனங்களை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்ற கேள்வி சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.
எனவே, கிழக்கு மாகாண கல்வியமைச்சு தொண்டர் ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க எடுத்த நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது என்றாலும் அதில் எந்த முறைகேடுகளும் இல்லை என்பதை வெளிப்படைத் தன்மையின் மூலம் உறுதிப்படுத்துவதற்காக – குறிப்பிட்ட தொண்டர் ஆசிரியர்கள் கடமையாற்றிய பாடசாலை, அவர்கள் என்ன பாடத்திற்காக நியமிக்கப்படவுள்ளனர் என்ற முழுமையான விபரங்களை உள்ளடக்கிய விபரப்பட்டியலை உடன் வெளியிட வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கோருகின்றனர்.