அப்துல் சலாம் யாசீம்
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பணியாற்றும் ஐந்து முஸ்லிம் ஆசிரியைகளுக்கும் இரு மாதங்களுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்க கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு பாடசாலை சமூகத்தினால் எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் நிலையில் இந்த விவகாரத்துக்கான சுமுக தீர்வு மத்திய கல்வி அமைச்சினால் வழங்கப்படும் வரைக்கும் சம்பந்தப்பட்ட ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி தெரிவித்தார்.
முஸ்லிம்கள் அச்சுறுத்தியதாக நான் கூறவில்லை
இதேவேளை சம்பந்தப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளோ அல்லது அவர்களது கணவன்மாரோ என்னை அச்சுறுத்தியதாக நான் யாரிடமும் கூறவில்லை. அவ்வாறான சம்பவம் நடக்கவும் இல்லை என திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் எமது நிலைப்பாடுகள் வேறுபட்டதாக இருக்கின்ற போதிலும் நாங்கள் முஸ்லிம் ஆசிரியைகளுடன் புரிந்துணர்வுடனேயே நடந்து கொள்கிறோம். முஸ்லிம் ஆசிரியைகளும் எம்முடன் நட்புடனேயே உள்ளனர். என்னை எவரும் அச்சுறுத்தவில்லை. நான் அவ்வாறு யாரிடமும் கூறவுமில்லை. முஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தியதாக கூறுவது சோடிக்கப்பட்ட செய்தியாகும் என்றும் அதிபர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாடசாலையின் ஆசிரியைகள் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் நேற்று முன்தினம் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்றுக் காலை திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது பாரம்பரியமாக இந்துக் கலாசாரத்தைப் பின்பற்றி வரும் தமது பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா எனும் முழு நீள ஆடை அணிந்து வருவதானது தமது கலாசாரத்தையும் பாடசாலையின் விதிமுறைகளையும் மீறுவதாகவும் முஸ்லிம் ஆசிரியைகள் சாரி அணிந்தே பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் பாடசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலைப்பாட்டிலிருந்து தம்மால் மாற முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
எனினும், பாடசாலை தரப்பின் நிபந்தனையை ஏற்க மறுத்த குறித்த முஸ்லிம் ஆசிரியைகளும் இக் கூட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் தரப்பினரும் இஸ்லாமிய வரையறைகளைப் பேணும் வகையிலான அபாயா ஆடையை கைவிட முடியாது என உறுதிபடத் தெரிவித்தனர். அத்துடன் கல்வியமைச்சானது, ஆசிரியைகள் பாடசாலைக்கு அபாயா ஆடை அணிந்து சமுகமளிக்க முடியாது என சட்ட ரீதியாக உத்தரவிடும்பட்சத்தில் அது தொடர்பில் தம்மால் பரிசீலிக்க முடியும் எனவும் அதுவல்லாத சட்ட வலுவற்ற நிபந்தனைகளுக்கு தம்மால் கட்டுப்பட முடியாது எனவும் சுட்டிக்காட்டினர். முஸ்லிம் ஆசிரியைகள் தமது கலாசார ஆடையான அபாயாவினையே அணிவார்கள். எனினும் கறுப்பு அபாயா வேண்டாம் எனில் வேறு நிறங்களினாலான அபாயாவினை அணியத் தயாராகவுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இரு தரப்பினரும் தமது நிலைப்பாடுகளில் உறுதியாகவிருந்த நிலையில் இந்த விவகாரம் மேலும் பூதாகரமாக்கப்பட்டு இனங்களிடையே முரண்பாடுகள் மேலெழுவதைத் தவிர்க்கும் வகையில் தற்காலிகத் தீர்வு காண மாகாண கல்வித்திணைக்களம் தீர்மானித்தது. இதற்கமைய இந்த விவகாரம் தொடர்பில் மத்திய கல்வி அமைச்சின் ஆலோசனையைப் பெறும் வரை எதிர்வரும் மே 1 ஆம் திகதி முதல் சம்பந்தப்பட்ட 5 ஆசிரியைகளுக்கும் அவர்கள் கோருகின்ற பாடசாலைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் இரு மாதங்களின் பின்னர் இவ் ஆசிரியைகளுக்கு கல்வி அமைச்சின் அனுமதியுடன் நிரந்தர இடமாற்றம் வழங்குவதெனவும் இணக்கம் காணப்பட்டது.
இன நல்லுறவைப் பேணுமாறு வலியுறுத்து
இதேவேளை இக்கலந்துரையாடலின் போது திருகோணமலை மாவட்டத்தில் வாழ்கின்ற சமூகங்கள் பிறரது மத கலாசாரங்களை மதித்து ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.