ஏ.ஆர்.ஏ.பரீல்
மாகாண சபைகளுக்கான தேர்தலை புதிய கலப்பு முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கான எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு குறித்த யோசனை விரைவில் பாராளுமன்றுக்கு கொண்டுவரப்படவிருக்கின்ற நிலையில் மாகாண சபை தேர்தல்களை பழைய விகிதாசார முறைப்படி நடத்த வேண்டும் என முஸ்லிம் காரங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் வலியுறுத்தியுள்ளன.
மாகாண சபைத் தேர்தல் பழைய விகிதாசார தேர்தல் முறையின் கீழன்றி புதிய முறையின்கீழ் நடத்தப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் வினவியபோதே இவ்விரு கட்சிகளும் இவ்வாறு வலியுறுத்தியுள்ளன.
மாகாண சபைகள் அமைச்சர் பைஸர்
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக பாராளுமன்றம் மாகாண சபை தொகுதி எல்லை நிர்ணய அறிக்கைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். அவ் அறிக்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். எல்லை நிர்ணயத்தில் சில குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றில் திருத்தங்களைச் செய்வதற்கு கட்சித்தலைவர்கள் தாமதிக்கக் கூடாது. சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். தற்போது பாராளுமன்றமே இது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும்.
நாம் அனைவரும் ஒன்றுசேர்த்து முயற்சித்தால் செப்டெம்பரில் நிச்சயம் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம். நான் எனது பெறுப்பினை நிறைவேற்றிவிட்டேன். தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய புதிய தேர்தல் முறையொன்று அறிமுகப்படுத்தப்படும்வரை தற்போது அமுலிலுள்ள விகிதாசார தேர்தல் முறையின் கீழேயே நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தம் கருத்து தெரிவிக்கையில்;
“சிறுபான்மை கட்சிகளுக்கும் சிறு கட்சிகளுக்கும் விகிதாசார தேர்தல் முறையே நன்மை பயக்கும். கபே போன்ற அமைப்புகள் மற்றும் சிறுபான்மை, சிறு கட்சிகள் விகிதாசார தேர்தல் முறையே வலியுறுத்துகின்றன.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விகிதாசார தேர்தல் முறையையே வலியுறுத்துகிறது” என்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் புதிய தேர்தல் முறையின் கீழன்றி பழைய விகிதாசார தேர்தல் முறையின் கீழேயே நடத்தப்பட வேண்டும் என்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. அத்தோடு மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயத்திலும் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் எல்லை நிர்ணயத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்க்கையில்;
“மாகாண சபைத் தேர்தல் ஒரு புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்தப்படுவதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தொடர்ந்தும் எதிர்த்து வருகிறது.
உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். புதிய உள்ளூராட்சி தேர்தல் முறையின்கீழ் எமக்கு அதிகமான உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தாலும் அதில் பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. அதன் பலனை இன்று நாடு அனுபவிக்கிறது. இது எமக்கு ஒரு பாடமாக அமையவேண்டும்.
மாகாண சபைத் தேர்தல் புதிய தேர்தல் முறையின் கீழன்றி பழைய தேர்தல் முறையின் கீழேயே நடத்தப்படவேண்டும் என்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது” என்றார்.