இன்று இருப்பது உண்மையான ஹக்கீம் இல்லை; ஹக்கீம் உள்ளிட்ட அமைச்சர்களின் ஆடைகள் களையப்பட்டுள்ளன: விமல் ஆவேசம்

FILE IMAGE

உங்களுக்கு மக்கள் பலம் இல்லை. அவ்வாறு மக்கள் பலம் இருந்திருந்தால் உள்ளூராட்சி சபை தேர்தலில் நிரூபித்து காட்டியிருப்பீர்கள் என விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இழக்கப்பட்டு விட்டது.இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனையுடன் அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லாமல் போகின்றது.இப்போது நாடாளுமன்ற தேர்தலை நடத்துங்கள். நாம் யார் என்பதை நிரூபித்து காட்டுவோம். எமக்கு மக்கள் பலம் இருக்கின்றது.அர்ஜூன் மகேந்திரன் இன்னும் சிங்கப்பூரில் இருக்கின்றார். அவரை இங்கு கொண்டு வர மாட்டார்கள். கொண்டு வந்து விசாரணை நடத்தவும் மாட்டார்கள்.கண்டி சம்பவத்தின் போது “இந்த நாட்டில் இருப்பது வெட்கம்” என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இந்த நாட்டில் இருப்பது வெட்கம் இல்லை. பிரதமருக்கு எதிராக வாக்களிப்பதே வெட்கமான விடயம் என விமல் சுட்டிக்காட்டினார்.

மேலும், நேற்று முதல் பிரதமருக்கு எதிராக இருந்த ஹக்கீம் இன்று அவருக்கு ஆதரவாக மாறிவிட்டார். இன்று இருப்பது உண்மையான ஹக்கீம் இல்லை. ஹக்கீம் உள்ளிட்ட அமைச்சர்களின் ஆடைகள் களையப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பணம் பெற்றுக் கொண்டு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கின்றது, மனசாட்சிக்கு பதிலாக பணசாட்சியே பேசுகின்றது. எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தைச் சேர்ந்த 22 பேர் நம்பக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக கை உயர்த்தினால் பெரும்பான்மை பலம் இழக்கப்பட்டுவிடும்.மூன்று மாத காலத்திற்குள் அரசியல் அமைப்பில் மாற்றம் செய்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உறுதியளித்தே இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச உரையாற்றும் போது சபையில் கூச்சல் எழுப்பப்பட்ட நிலையில், சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறுக்கிட்டு உரையாற்றியிருந்தார்கள். எனினும் அவர்களுடைய பேச்சுக்களுக்கு விமல் மிகவும் ஆவேசமாக பதில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.