நம்பிக்கையோடு கேட்ட பிரார்த்தனை

 

‘எங்கள் இறைவனே. நிச்சயமாக நான் என் சந்ததிகளை மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்துவிட்டேன். அது விவசாயமற்ற ஒரு பள்ளத்தாக்கு. எங்கள் இறைவனே, அவர்கள் உன்னைத் தொழுது கொண்டிருப்பதற்காக அங்கு வசிக்கச்செய்தேன். மனிதர்களில் ஒரு தொகையினரின் உள்ளங்கள் அவர்களை நேசிக்கும்படி நீ செய்வாயாக, பற்பல கனி வர்க்கங்களையும் நீ அவர்களுக்கு உணவாக அளித்து வருவாயாக. அதற்கு அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள்’. (திருக்குர்ஆன் 14:37)

‘என் இறைவனே என்னையும், என் சந்ததிகளையும் உன்னைத் தொழுது வருபவர்களாக ஆக்கி வை. எங்கள் இறைவனே, என் பிரார்த்தனையை அங்கீகரித்து கொள்வாயாக’. (திருக்குர்ஆன் 14:40)

நம் அறிவுக்கு எட்டாத பல அற்புதங்களும், அதிசயங்களும் நிறைந்ததாக இந்த உலகை படைத்தான் இறைவன்.

நாம் வசிக்கும் இந்த பூமி மற்றும் பிற கோள்கள் சூரியனை மையமாகக்கொண்டு சுற்றி வருகின்றது. இறைவனின் கட்டளையை ஏற்று அனைத்து கோள்களும் இறைவன் வகுத்த பாதையில் சுற்றி வருகின்றன. இதுபோல காற்று, மழை போன்ற இயற்கையையும் உருவாக்கினான் இறைவன்.

இவற்றை எல்லாம் இறைவன் படைத்தது மனிதனுக்காக. அந்த மனிதனைப் படைத்தது தன்னை வணங்க. தன்னை வணங்குவதற்கு மட்டுமே படைக்கப்பட்ட மனிதனுக்கு, வணக்கத்திற்கு வேண்டிய ஒரு முறையான இறை இல்லத்தை அடையாளம் காட்ட எண்ணிய இறைவன் அமைத்தது தான் ‘கஅபா’. ஆதம் நபி காலத்தில் இது உருவாக்கப்பட்டது. இப்ராகிம் நபிகள் காலத்தில் ‘கஅபா’ சீரமைக்கப்பட்டது.

இப்ராகிம் நபிகள் அறிவு ஜீவியாக விளங்கினார்கள். எதையும் ஏன், எதற்கு, எப்படி என்ற வினாக்களோடு விளங்கி கொள்ள ஆர்வம் காட்டினார்கள். அறிவில் சிறந்தவர்கள் மட்டுமல்ல, தியாகத்திற்கு எடுத்துக்காட்டாகவும் அவர் விளங்கினார்.

உலக விஷயங்களில் ஏன், எதற்கு என்று வினவியவர்கள் அல்லாஹ் கட்டளை என்று வந்த போது, அதை உண்மை என்று உணர்ந்து கொண்டதால் எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே கட்டளைக்கு கட்டுப்பட்டார்கள்.

அல்லாஹ், இப்ராகிம் நபிகளுக்கு இட்ட கட்டளைகளில் பல மிகவும் கடினமானவை. மனிதர்களால் இது சாத்தியமா? என்ற கேள்வி எழும் வகையில் இந்த கட்டளைகள் இருந்தன.

ஆனால் இறைவனின் இந்த கட்டளைகள் அனைத்தும் இப்ராகிம் நபிகளின் தியாகத்தை சோதிக்கும் ஒரு பாடமாகவே அமைந்திருந்தது.

அன்றொரு நாள்… பாரசீக நாட்டில் அமைதியாய் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த இப்ராகிம் நபிகளுக்கு அல்லாஹ்விடம் இருந்து கட்டளை வந்தது.

‘தாங்களும் துணைவியார் ஹாஜரா அம்மையாரும் தள்ளாத வயதில் அருந்தவமாய் பெற்றெடுத்த அருமை மகனார் இஸ்மாயில் (அலை) அவர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு பொட்டல் பாலைவனத்தை நோக்கி பயணம் செய்யுங்கள்’ என்று இறைவன் கட்டளையிட்டான்.

எந்தவித மறுப்பும் சொல்லவில்லை இப்ராகிம் நபிகள். உடனே பயணத்திற்கு தயாரானார்கள். அன்னை ஹாஜராவிடம் `பயணம் போகிறோம்’ என்று மட்டும் சொன்னார்களே தவிர எங்கே போகிறோம்? எதற்கு போகிறோம்? என்று சொல்லவில்லை.

பச்சிளம் பாலகனைச் சுமந்து கொண்டு பாலைவனம் நோக்கி நடந்தார்கள். வெகுதூரம் நடந்ததால் ஏற்பட்ட களைப்பு, தாகம், பசி என்று எந்த ஒரு சிரமத்தையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் அவர்கள் பயணம் நீண்டு கொண்டிருந்தது.

பாலைவனத்தின் நடுப்பகுதியை அவர்கள் அடைந்தபோது இறைவனின் கட்டளையை நிறைவேற்ற தயாரானார் இப்ராகிம் நபிகள். தனது அருமை மனைவி ஹாஜரா, அருமைப் பிள்ளை இஸ்மாயில் ஆகியோரை அப்படியே பாலைவனத்தில் விட்டுவிட்டு வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.

எந்தவிதமான செய்தியையும் பரிமாறாமல் அப்படியே அந்த இடத்தில் இருவரையும் தன்னந்தனியாக விட்டுவிட்டு திரும்பிச் சென்றார்கள். புல்பூண்டுகள் கூட இல்லாத, நிழல் எதுவும் இல்லாத, தாகம் தீர்க்க தண்ணீர் இல்லாத, ஆள் நடமாட்டம் இல்லாத சுடுமணல் பிரதேசம் அது.

அன்னை ஹாஜரா பதைபதைக்கிறார்கள். ‘அன்புக்கணவரே, என்ன காரியம் செய்கிறீர்கள்?, எங்களை தன்னந்தனியாக தவிக்க விட்டு விட்டு எங்கே திரும்பிச் செல்கிறீர்கள்?’ என்று பதற்றத்தோடு வினவினார்கள்.

இப்ராகிம் நபிகளிடம் எந்தவித சலனமும் இல்லை. நபிகளின் சுபாவத்தை நன்கு அறிந்த அன்னை அவர்கள், ‘இது இறைவன் கட்டளையா?’ என்று வினவினார்கள்.

அதற்குகூட வாய்திறந்து ஆம் என்று பதில் சொல்லாமல், சற்று தன் தலையை மட்டும் ஆமோதிப்பது போல் அசைத்தார் இப்ராகிம் நபிகள்.

‘அப்படியானால் எங்களுக்கு அச்சமும் இல்லை, நாங்கள் துக்கப்படவும் மாட்டோம். அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவன் நாடியது நடைபெற்றே தீரும். நாங்கள் அவன் மீதே நம்பிக்கை கொண்டுள்ளோம்’ என்று மிக உறுதியாக நபிகளுக்கு பதிலுரைத்தார்கள் அன்னை ஹாஜரா.

சிறிது தூரம் சென்ற இப்ராகிம் நபியவர்கள், இறைவனிடம் கையேந்துகிறார்கள். ‘இறைவா, இதுவரை நீ சொன்னபடி நான் செய்து விட்டேன். என் மனைவியையும், மகனையும் அப்படியே விட்டுவிட்டு திரும்பி பாராமல் வந்து விட்டேன். இது வறண்ட பூமி. நீர்நிலைகள் இல்லாத பாலைவனம். பிற பகுதிகளில் இருந்து வருகின்ற வழிப்போக்கர்களால் மட்டுமே வளம்பெறும் வாய்ப்புள்ள பகுதி. எனவே மனிதர்களில் ஒரு பகுதியினரின் உள்ளங்களை இவர்கள் பக்கம் திருப்புவாயாக. பற்பல கனிவர்க்கங்களையும் உணவாக அளித்து இவர்களை ஆசீர்வதிப்பாயாக’ என்று மனம் உருகி பிரார்த்தித்தார்கள். அப்போது அவரது கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது.

இந்த பிரார்த்தனையை எந்தவித மறுப்பும் இன்றி அப்படியே ஏற்றுக்கொண்ட அல்லாஹ், அவர்கள் கேட்டபடியே அத்தனையையும் வழங்கி ஆசீர்வதித்தான்.

அதன் பின் அன்னை ஹாஜரா, ஸபா-மர்வா குன்றுகளுக்கு இடையே தொங்கோட்டம் ஓடிய நிகழ்ச்சி, இஸ்மாயில் நபியின் பாதங்களின் கீழே உதித்தோடிய ஜம் ஜம் நீர் ஊற்று பெருகி ஓடிய அதிசயங்கள் நடந்தன.

நீர்நிலை ஆதாரம் இருந்ததால் வழிப்போக்கர்களின் வருகை அதிகரித்து ஆங்காங்கே குடியிருப்புகள் தோன்றி, அந்தப்பகுதி செழிப்படைந்தது.

அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து, செய்கைகளில் நேர்மை, நம்பிக்கையில் உறுதியோடு கேட்கும் பிரார்த்தனைகள் நிச்சயமாக அங்கீகரிக்கப்படும் என்பதற்கு இந்த வரலாற்று சம்பவம் ஒரு சான்றாக உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும்.

பாலைவனப்பகுதியில் வற்றாத ஜீவனுள்ள நீரூற்றா?, பாலைவனத்தில் புல் பூண்டுகளுக்கே இடமில்லாத இடத்தில் உலகத்தின் அத்தனை கனி வர்க்கங்களுமா? இது எப்படி சாத்தியமாகும்?

ஆம், நபியவர்கள் நம்பிக்கையோடு கேட்டார்கள். அல்லாஹ் அள்ளிஅள்ளி கொடுத்தான். ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக அள்ளஅள்ளக் குறையாத நீர் ஊற்று இன்று வரை நிலைத்திருக்கிறது.

தண்ணீர் மட்டுமல்ல காய்ப்பு பருவங்கள் இருக்கிறதோ இல்லையோ, விளையும் இடத்தில் கூட விலைக்கு கிடைக்காத கனி வர்க்கங்கள் இன்றும் என்றும் மக்காவில் கிடைத்துக் கொண்டிருப்பது இறைவனின் அளவற்ற கருணையில் தானே.