ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது.
தற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் மிகவும் கொடூரமான ‘மர்ம விஷம்’ ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் ரஷ்யாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே கடும் மோதல் எழுந்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் பிரிட்டனின் பக்கம் நின்ற நிலையில், ரஷ்யாவின் 23 தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பிரிட்டன் பிரதமர் தெரேசா மே உத்தரவிட்டார். இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் மாஸ்கோவில் உள்ள 23 பிரிட்டன் தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டது.
லண்டன் நகரில் இருந்து 23 தூதரக அதிகாரிகளும் தங்களது குடும்பத்தினர் 60 பேருடன் பிரிட்டனை விட்டு நேற்று வெளியேறினர். இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜிவ் லவ்ரோவ், “ரஷ்யாவுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் பிரிட்டன் மேற்கொண்டால், அதே வேகத்தில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும்” என கூறினார்.