எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார் பில் போட்டியிடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கட்சியின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதற்கு நான் தயாராக உள்ளேன். ஒற்று மையைக் கட்டிக்காக்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்வதற்கு பிரசார நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு மஹிந்தராஜபக் ஷ தயாரானால் ஒன்றிணைந்து இத்தகைய செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு தயாராக உள்ளேன். ஆனால் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்தவை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்தராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்கவேண்டும் என்பது உட்பட நான்கு விடயங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியுடன் விரி
வான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவநாணயக்கார, தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம், லங்கா சமசமாஜக்கட்சியின் தலைவர் திஸ்ஸவிதாரண, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.யூ. குணசேகர, தேசிய சுதந்திர முன்னணியின் சார்பில் வீரகுமார திஸாநாயக்கஇ ஜனநாயக மக்கள் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் பிரபாகணேசன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில்பிரேமஜயந்த, ஈ.பி.டி.பி. யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
பிரதமர் வேட்பாளராக எதிர்வரும் பொதுத்தேர்தலில் மஹிந்தராஜபக்ஷவை நியமிக்கவேண்டும் இதன் மூலமே கட்சியின் ஒற்றுமையினை கட்டிக்காக்க முடியும் என்று கூட்டுக்கட்சியின் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். இதன் போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை போட்டியிடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அவர் வெற்றி பெற்று பிரதமராக வந்த பின்னர் என்ன செய்வார் என்பது எனக்குத் தெரியும். திரும்பவும் அவர் ஜனாதிபதியாக முயல்வார்.
கட்சியின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதற்கு நான் தயாராக உள்ளேன். அடுத்த பொதுத்தேர்தலில் கட்சியினை வெற்றிபெறச் செய்வதற்கு மஹிந்தராஜபக்ஷ பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அவருடன் இணைந்து பிரசாரத்தை மேற்கொண்டு கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்வதற்கு நான் தயாராக உள்ளேன். இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் . எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அனைத்து பங்காளிக் கட்சிகளையும் ஒன்றிணைத்து பலமான கூட்டணியாக களமிறங்குவது, தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவருவது, பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவருவது குறித்தும் ஆராயப்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் 14 பங்காளிக் கட்சிகளை ஒன்றிணைந்து இம்முறை பொதுத் தேர்தலில் களமிறங்குவது தொடர்பிலும் ஜனாதிபதியுடன் இவர்கள் கலந்துரையாடியுள்ளனர். பொதுத் தேர்தலில் பழைய கூட்டணியை உருவாக்க வேண்டும். இதில் ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட ஏனைய பங்காளிக் கட்சிகளையும் ஒன்றிணைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அதேபோல் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் முறைமையில் மற்றம் கொண்டுவருவதன் சாத்தியப்பாடு தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர். 20ஆவது திருத்தம் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியம் அதேபோல் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளை பாதிக்காத வகையில் எவ்வாறான மாற்றங்கள் கொண்டுவருவது என்பன தொடர்பிலும் இவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.
அதேபோல் முக்கியமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் 70 க்கும் அதிகமான உறுப்பினர்கள் பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவருவதை ஆதரித்துள்ளதுடன் அடுத்த பாராளுமன்ற அமர்வில் நம்பிக்கை இல்லா பிரேரணையை முன்வைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொண்டிருந்த ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவருவது மற்றும் தேர்தலை உடனடியாக நடத்துவது தொடர்பில் அக்கறை காட்டியுள்ளதுடன் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையினை கொண்டு வருவது மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை அபயராம விகாரையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதன்போதும் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவருவது, தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவருவது மற்றும் தேர்தலில் மஹிந்தவை களமிறக்குவது என்பன தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவருவது மற்றும் தேர்தல் முறைமையில் மற்றம் கொண்டுவருவது தொடர்பில் தாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அடுத்த பொதுத்தேர்தலில் சுதந்திரக்கட்சியில் போட்டியிடுவதற்கு அனுமதிக்க மாட்டேன் என்ற ஜனாதிபதியின் திடமான கருத்துத் தொடர்பிலும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவிடம் எடுத்துக்கூறியுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்தியக்குழுவைக் கூட்டி இவ்விடயம் தொடர்பில் உறுதியான முடிவினை எடுக்கலாம் என்ற தொனியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ கருத்துத் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.