கண்டி, அம்­பா­றை வன்­மு­றைகள் சூட்சுமமாக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி என்பது உறுதியாகின்றது – ஹக்கீம்

 
 
உள்ளுராட்சித் தேர்தல் முடிவடைந்தவுடன் குறிப்பாக அம்பாரை மற்றும் கண்டி மாவட்டம் உட்பட நாட்டின் பல்வேநு பிரதேசங்களில் இனவாத வன்செயல்கள், சமய ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் பொது மக்களின் உடைமைகளுக்கு சேதம் விளைவித்தல் போன்றவை நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவங்கள் திடீரென ஏற்படுவன அல்ல என்பதோடு திட்டமிட்ட கும்பல்களும், நபர்களும் சூழ்ச்சிசெய்து நாட்டையும், அரசாங்கத்தையும் ஸ்திரமற்ற நிலைமைக்கு உள்ளாக்கும் நோக்கத்துடன் ஒரு இனத்தவருக்கு எதிராக திட்டமிட்டு முன்னெடுப்பனவாகும்.
 
இவற்றில் மிக அண்மையில் இடம்பெற்றுள்ளதானது நேற்று (திங்கட்கிழமை) கண்டி மாவட்டத்தில் திகன, தெல்தெனிய போன்ற பிரதேசங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சம்பவமாகும். இச்சம்பவங்களை உற்றுநோக்கும்போது அவை நடைபெறும் இடங்களுக்கு திட்டமிட்ட கும்பல்களும், நபர்களும் வந்து பாரதூரமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டது புலப்படுகின்றது. இந்த வன்முறைகள் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படுவதாக எடுத்த எடுப்பிலேயே தோன்றினாலும்கூட அதில் தீய நோக்கங்கள் பல பொதிந்துள்ளன. 
 
திகன பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் நடந்த தகராறு ஒன்றின் காரணமாக சிங்கள இளைஞர் ஒருவர் இறக்க நேரிட்டதோடு அதன் விளைவாக முஸ்லிம்கள் நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) அந்த இளைஞரின் இறுதிக்கிரியைகள் நடைபெற்றதோடு அதில் கலந்துகொள்ள வந்தவர்கள் மாதிரி காட்டிக்கொண்டு வந்த கும்பல் திட்டமிட்டு முஸ்லிம்களின் உயிருக்கும், சொத்துகளுக்கும், வணக்கஸ்தலங்களுக்கும், வர்த்தக நிலையங்களுக்கும் தாக்குதல் மேற்கொண்டனர்.
 
இதில் பள்ளிவாசல்களும், முஸ்லிம்களின் வியாபார ஸ்தானங்களும், வீடுகளும், மோட்டார் வாகனங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பொ­லிஸார் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்தி கண்டி மாவட்டத்தில் ஓரளவு அமைதியை ஏற்படுத்த எத்தனித்த போதிலும் நிலமை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படாததோடு அப்பிரதேசங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
 
அவ்வாறே கடந்த பெப்ரவரி 26ஆம் திகலி இரவு அம்பாரை நகரத்தில் நடத்தப்பட்ட இனவாத வன்செயலில் அங்குள்ள முஸ்லிம்களின் வணக்கஸ்தலம் மற்றும் மூன்று உணவகங்கள் என்பனவற்றிற்கு பலமான சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
 
இதன்பின்னர் அம்பாரை நகரத்தில் சுமூகநிலை ஓரளவு நிலவிய போதிலும் இரண்டு இனங்களுக்கிடையில் மோதலுக்கான பின்னணி தோற்றுக்விக்கப்பட்டன. அந்த அமைதியின்மை மற்றும் சட்டமும், ஒழுங்கும் சீர்கேட்டமை பல நாட்களாக நீடித்ததோடு இப்போது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதகத் தெரிகின்றது.
 
இவ்வாறு முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கும், உணவகங்களுக்கும் தாக்குதல் தொடுத்து பாரிய வன்முறையை ஏற்படுத்தியது ஒரே செயற்பாட்டில் சட்டவிரோதமாக ஒன்றுகூடிய கும்பலாகும் என்பது திட்டவட்டமான சாட்சியங்களினூடாக தெரியவந்தது.
அது தொடர்பில் நடந்து கொண்ட விதமும் நீதியை கையான்ட விதமும் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. 
 
அம்பா­றை நீதவான் நீதிமன்றத்திற்கு பொலிஸாரால் முதலில் அறிக்கையிடப்பட்ட போது மேற்படிச் சம்பவம் இனவாத வன்செயல் மற்றும் இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் எனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே இறை காரணிகள் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் என்பதன் கீழ் வருவன என்றும் அதற்கேற்பவே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு கூறப்பட்டது. 
 
பின்னர் பொலிஸாரால் நீதிமன்றத்துக்கு முன்வைக்கப்பட்ட அறிக்கைகளில் இந்த சம்பவங்கள் தனிப்பட்ட தகராரினால் ஆரம்பமானதாகவும் அதனால் முன்னர் கூறிய சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுப்பதற்கு ­கா­ர­ணி­கள் எவையும் இல்லையென்பதால் நாட்டின் பொதுவான நீதியின்கீழ் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
அவ்வாறே மேற்படி சம்பவங்கள் இரண்டும் ஒரே செயல்பாட்டினால் ஏற்பட்ட வணக்கஸ்தலத்தின் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தல், உணவகங்கள் சிலவற்றுக்கு நாசம் விளைவித்தல் மற்றும் இனரீதியான அமைதியின்மையை ஏற்படுத்தல் என்பன நீதிமன்றுக்கு மறைக்கப்பட்டு சாதாரண வன்செயல் என்ற தோற்றப்பாட்டுடன் அங்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்தச் சம்பவம் சட்ட விரோத கும்பலினால் மேற்கொள்ளப்பட்டது என்பதும் நீதிமன்றத்திற்கு மறைக்கப்பட்டுள்ளது.
 
மேற்கூறப்பட்ட எல்லா வன்முறைகளும் இனவாத வன்செயலை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைத்த திட்டமிடப்பட்ட அமைப்புக்களையும் நபர்களையும் கொண்டு சூட்சுமமாக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி என்பது உறுதியாகின்றது.
 
பெப்ரவபெ 26ஆம் திகதி இரவு முஸ்லிம் ஒருவரால் நடாத்தப்படும் உணவகமொன்றுக்கு வந்த நபர்கள் சிலர் அங்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆகாரத்தில் வில்லை ஒன்று கலக்கப்பட்டதாகவும் அது கருத்தடை மாத்திரை என்றும் குற்றம்சாட்டி முழு செயற்பாடும் ஆரம்பிக்கப்பட்டது. அந்த நபர் ஏனையவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த உணவகத்தில் சாப்பாட்டில் கருத்தடை ­மாத்­தி­ரை போடப்படுவதாகவும் அதனால் சிங்கள மக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு முஸ்லிம் இனத்தவர் முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆகாரத்துடன் கருத்தடை மாத்திரையை கலப்பதால் கருத்தடையை ஏற்படுத்த முடியாதென்பதற்கு மதுத்துவ விஞ்ஞான ரீதியாக சான்றுகள் முன்வைக்கப்பட்ட வண்ணமுள்ளன.
 
அண்மையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்த உத்தியோகபூர்வ அறிக்கையிலும் இது உறுதியாகின்றது. இதிலிருந்து முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்கள் மீது தாக்குதல் தொடுப்பதும், உடமைகளுக்கு சேதம் விளைவிப்பதும் வன்செயலை ஏற்படுத்துவதும் சில கும்பல்கலாளும், நபர்களாலும் எந்தவிதமான அடிப்படையோ காரணமோ இன்றி மேற்கொள்ளப்படுவன என்பது தெரிய வருகின்றரை இவ்வாறான துர்ப்பாக்கிய நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படுவதற்கு பெரும்பாலும் இடமுள்ளது என்பது எனது கருத்தாகும்.
 
சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுதல் நீதியை நிலைநாட்டுதல் என்பவற்றுக்கு பொறுப்பான பொலிஸ் திணைக்களம் நடந்து கொண்ட விதம் இந்த சம்பவத்தில் மிகவும் பாரதூரமான விடயமாக கணிக்கப்படுகின்றது. அம்பாரை பொ­லிஸார் பக்கச்சார்பாகவும், தமது தொழிலின் முக்கியத்துவத்தை மதிக்காத விதத்தில் நடந்து கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் அவர்கள் மீது குற்றம் சாட்டுகின்றார்கள். 
 
எல்லா மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலிஸ் திணைக்களம் இந்த நிகழ்வில் ஒரு பக்கச்சார்பாகவே நடந்து கொண்டிருக்கின்றது. இந்தப் பக்கச்சார்பு வன்செயலை கட்டுப்படுத்துவதற்கும், வழக்கு தாக்கல் செய்வதற்கும் அமைதியை பேணுவதற்கும் தவறியிருப்பது என்பது பிரதேச மக்களின் பேசு பொருளாக ஆகியிருக்கின்றது.
 
இந்த நிகழ்வில் பொலிஸ் நடந்து கொண்டவிதம் அண்மையில் தம்புத்தேகம போன்ற இடங்களில் ஏற்பட்ட சம்பவங்களின் போது அவர்கள் நடந்து கொண்ட விதத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாகும். அந்த சம்பவங்களின்போது பொலிஸார் உடனடியாகச் செயற்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்து நீதியை செயல்படுத்தியிருக்கின்றார்கள். 
 
மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுகின்ற வேளையில் நிறைவேற்று அதிகாரத்தின்கீழ் வரும் ஒரு சாரார் இவ்வாறு நடந்து கொள்வதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. 
 
ஐக்கிய நாடுகள் அமைப்பும், சர்வதேச சமூகமும் தற்போது எங்கள் நாட்டின் மீது கொண்டுள்ள நல்லெண்ணத்தை சீர்குலைக்கும் விதத்திலும் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் விதத்திலும் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும் அதனூடாக மக்களின் பொருளாதார நிலைமையை பாழாக்குவதற்கு இவ்வாறான செயல்களின் தீய நோக்கங்கள் இருப்பதாக கூறவேண்டியிருக்கின்றது.
 
ஜனாதிபதியும், பிரதமரும் நிலைமையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிப்பதோடு இவ்வாறான சம்பவங்கள் எந்தவொரு இனத்தினருக்கும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
 
நாட்டின் ஜனநாயகம், அடிப்படை உரிமைகள் நேர்மையை கடைப்பிடித்தல் இனங்களுக்கிடையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் விரும்புகின்ற எல்லா மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சமய தலைவர்கள், அரசியல்வாதிகள், சிவில் அமைப்பினர் ஆகியோர் இனிமேல் இவ்வாறான துர்ப்பாக்கிய நிகழ்வுகள் ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்கின்றோம்.
 
அவ்வாறு நடந்து கொள்வதன் மூலமே இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கைகள், சந்தேகங்கள் என்பவற்றை களைந்து அனைவரும் ஒன்றுபட்டு வாழக்கூடிய தேசத்தை கட்டியெழுப்ப முடியுமென்பது எனது நம்பிக்கையாகும். இறுதியாக, இந்த சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடுகளையும், நிவாரணங்களையும் வழங்குமாறும் வேண்டிக்கொள்கின்றேன்.