நேர்மையான எங்கள் செயற்பாடுகளைக் கொச்சைப்படுத்தி, வாக்குத் தேடி அலையும் கேவலத்தை என்னவென்றுதான் சொல்வது? : அமைச்சர் ரிஷாட்

 

-சுஐப் எம்.காசிம்- 

சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி, அந்த நகரை நவீன முறையில் நிர்மாணிப்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

முசலிப் பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சிலாவத்துறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,

முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றம் இலகுவாக நடந்துவிடவில்லை. யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர், இந்தப் பிரதேசத்துக்கு வந்த போது, வெறும் காடாகவும், மயானமகவும், முட்புதர்களாகவுமே இவை காட்சியளித்தன.

மின்சாரம் இருக்கவில்லை. பாடசாலைக் கட்டிடங்களும், அலுவலகக் கட்டிடங்களும், பள்ளிவாசல்களும், வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டும், நிர்மூலமாக்கப்பட்டும் கிடந்தன. வன்னி மக்கள் எமக்கு அளித்த வாக்குகளினால் அரசியல் அதிகாரத்தைப் பெற்று, இந்தப் பிரதேசத்தை மீளக்கட்டியெழுப்ப முடிந்தது. மின்சார வசதிகள், நீர் வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுத்தோம். இவற்றை வரலாறு கூறும். இந்த வரலாற்றை எவராலும் அழிக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது. ஆனால், சீசனுக்கு சீசன் இங்கு வருகின்ற பொட்டணி வியாபாரிகளும், அவர்களின் கொந்தராத்து ஏஜண்டுகளும் எதுவுமே செய்யாமலும், செய்ய முடியாமலும் எம்மை விமர்சிக்கின்றனர். 

உள்ளூராட்சித் தேர்தலில் தாங்கள் “தோல்வியைத் தழுவப் போகின்றோம்” என்ற அச்சத்தின் காரணமாக, மக்கள் காங்கிரஸின் கோட்டைகளான முசலிப் பிரதேச சபையையும், ஓட்டமாவடி பிரதேச சபையையும் தாம்தான் வெல்லப் போகின்றோம் என்று புதிய கதையை நாடு முழுவதிலும் கூறிவருகின்றனர்.

மக்கள் மத்தியிலே ஒரு மாயையையும், பிரமையையும் ஏற்படுத்தி எச்ச சொச்ச வாக்குகளையாவது பெற்றுக்கொள்ளலாம் என்ற தந்திரோபாயத்திலே இவ்வாறு கூறித்திரிகின்றனர்.

ஓட்டமாவடி பிரசாரக் கூட்டத்துக்கு வருகை தந்த பிரதமர், அங்கே குழுமியிருந்த மக்கள் வெள்ளத்தைக் கண்டு பிரமிப்படைந்ததை, நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். அற்பசொற்ப இலாபத்துக்காக பிரதேசவாதத்தையும், ஊர்வாதத்தையும் விதைத்து, எங்கள் நேர்மையான செயற்பாடுகளைக் கொச்சைப்படுத்தி, வாக்குத் தேடி அலையும் கேவலத்தை என்னவென்றுதான் சொல்வது?

எங்களால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், அரசியல் முகவரி பெற்றவர்கள் இப்போது, இந்த சீசன் வியாபாரிகளுடன் சேர்ந்துகொண்டு எங்களைத் தூற்றி வருகின்றனர்.

நமது கட்சி கரடுமுரடான பாதையில் பயணிக்கின்றது. இந்தப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்தனை அபிவிருத்திகளையும் “நாங்கள்தான் மேற்கொண்டோம்” என்று எம்மால் நேர்மையுடன் கூறமுடியும். பல்லாயிரக்கணக்கான வீடுகளையும், நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களையும், சுமார் ஆயிரக்கணக்கான தொழில் வாய்ப்புக்களையும், இன்னோரன்ன அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டுள்ளோம். இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் ஒரு பத்துப் பேருக்காவது வீடுகள் அமைத்துக் கொடுத்துள்ளார்களா? இல்லையேல் ஒரு பத்துப் பேருக்காவது தொழில் வாய்ப்புக்களைத்தானும்  பெற்றுக் கொடுத்துள்ளார்களா? என்பதை பகிரங்கப்படுத்தட்டும் பார்க்கலாம்.

உங்களின் கஷ்டங்களிலும், துன்பங்களிலும் பங்குபற்றாத இந்த மொத்த வியாபாரிகளுக்கு, நீங்கள் இந்தத் தேர்தலில் தகுந்த பதில் வழங்க வேண்டும். “நீங்கள் செய்த துரோகத்துக்கு இதுதான் மருந்து என உணர்த்த வேண்டும்” இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் மாகாண சபை உறுப்பினர் அலிகான் சரீப் ஆகியோரும் பங்கேற்று உரையாற்றினர்.