இந்திய பெருங்கடலில் உள்ள மாலத்தீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித்தலைவர்கள் விடுவிக்க வேண்டும், 12 எதிர்க்கட்சி எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவுபடி 12 எம்.பி.க்கள் பதவியை மீண்டும் அளித்தால் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீனின் பதவி பறிபோகும் சூழல் உள்ளது.
இதனால், அவர் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து விட்டார். மேலும், பாராளுமன்றம் கூடுவது தள்ளி வைக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. நீதிபதிகளின் உத்தரவை ஏற்க கூடாது என அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியது.
அரசியல் குழப்பம் நிலவியதால் ஐ.நா சபையும், சர்வதேச நாடுகளும் எங்களை கவனிக்க வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதிபர் யாமீன் பதவி விலக வேண்டும் என ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் அணிவகுத்தனர்.
இதனால், எப்போது வேண்டுமானாலும் ராணுவ ஆட்சி பிரகடணப்படுத்தலாம் என்ற சூழல் நிலவிய நிலையில், 15 நாட்கள் நெருக்கடி நிலையை அதிபர் யாமீன் பிரகடணப்படுத்தியுள்ளார். எதிர்க்கட்சி எம்.பி.க்களை கைது செய்யும் பணியில் ராணுவம் இறங்கியுள்ளது. குடிமக்களின் அனைத்து அடிப்படை உரிமைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கயூமை மாலத்தீவு போலீசார் கைது செய்துள்ளதாக அவரது செய்திதொடர்பாளர் அப்துல் அலீம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட மவுமூன் அப்துல் கயூம், அதிபர் யாமீனின் சகோதரர் ஆவார். இவர் 1978-ம் அண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரை சுமார் 30 ஆண்டுகளாக மாலத்தீவின் அதிபராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.