மதுபான விற்பனை நிலையங்களை காலை 8 மணி முதல் இரவு 10 மணி திறந்து வைக்கவும் பெண்கள் மதுபானங்களை கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கவும் நடவடிக்கை எடுத்து நிதியமைச்சர் வெளியிட்டிருந்த சுற்றறிக்கையை உடனடியாக இரத்துச் செய்ய உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய நாளைய தினம் இந்த சுற்றறிக்கை இரத்தாகும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.அகலவத்தை பிரதேசத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
நீதியான சமூகம் குறித்து பேசுவது போல் நீதியான சமூகத்தை கட்டியெழுப்ப தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.வாகன விபத்து சம்பந்தமான தனது சகோதரர் கைதுசெய்யப்பட்ட போது தான் ஒரு வார்த்தை கூட பொலிஸாரிடம் பேசவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் வரலாற்றில் ஜனாதிபதி, பிரதமர் அல்லது அமைச்சர் ஒருவரின் சகோதரர் வாகன விபத்து தொடர்பாக சிறைக்கு சென்றிருந்தால், அது தனது சகோதரர் மாத்திரமே எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.