நாவிதன்வெளி பிரதேசத்தில் நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்த குடிநீர் வழங்கல் திட்டத்தை, சிலர் தங்களது தேர்தல் பிரசாரங்களுக்காக தேர்தல் ஆணையாளரிடம் கூறி இடைநிறுத்தி வைத்துள்ளனர். அப்பாவி மக்களுக்கு குடிநீர் வழங்குவதை அரசியலாக்கும் முயற்சியை முறியடித்து, விரைவில் உங்களது வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நாவிதன்வெளி பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (14) சாளம்பைக்கேணியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
20 மில்லியன் ரூபாவை ஒதுக்கி இந்த வட்டாரங்களில் பாதை அபிவிருத்திகளை செய்துவருகிறோம். மிகவும் பழைய கட்டிடத்தில் இயங்கிவரும் சாளம்பைக்கேணி தாருல் ஹிக்மா பள்ளிவாசலை புனரமைப்பதுடன், சுற்றுப்பகுதியில் ஓய்வெடுக்கூடிய வகையில் பூங்கா ஒன்றையும் நகர திட்டமிடல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் செய்வதற்கு தீர்மானித்துள்ளேன்.
நாவிதன்வெளியில் குடிநீர் வழங்கல் திட்டத்துக்காக பல இடங்களில் குழாய்களை பதித்து வருகிறோம். ஒப்பந்தக்காரர்கள் விட்ட தவறுகளினால் குறுக்கு வீதிகளில் குழாய்கள் பதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளன. இதற்கா விசேட அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து, கொழும்பில் வேறொரு செயற்திட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்தக்காரர்களை இதற்காக நியமித்துள்ளேன். இத்திட்டத்துக்காக 700 மில்லியன் ரூபாவை எனது அமைச்சிலிருந்து ஒதுக்கியுள்ளேன்.
இந்த வேலைத்திட்டத்தை மீண்டும் தொடங்கும்போது, இங்குள்ள சுதந்திரக்கட்சி வேட்பாளர் ஒருவர், தேர்தலுக்காக இதை செய்வதாக தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அப்பாவி மக்களுக்கு குடிநீர் கொடுப்பது அரசியலுக்காக செய்கின்ற ஒரு வேலையல்ல. சில பிரச்சினைகளால் இடைநடுவில் கைவிடப்பட்ட வேலையை மீள ஆரம்பிக்கும்போது, சிலர் அதற்கு அரசியல் சாயம்பூச முற்படுகின்றனர். இதனால் அப்பாவி மக்களுக்கு குடிநீர் வழங்குவது தடைப்படுகிறது.
இந்த வேலைத்திட்டம் தாமதப்படுமானால் ஒப்பந்தக்காரர்களுக்கு நாங்கள் மேலதிக கட்டணங்களை செலுத்த வேண்டியேற்பேடும். இது தேர்தலுக்காக செய்கின்ற வேலையல்ல. ஏற்கனவே ஆரம்பித்த திட்டம் என்பதை தேர்தல் ஆணையாளருக்கு தெளிவுபடுத்துமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒருசிலரின் அரசியல் பிரசாரங்களுக்கான, அப்பாவி மக்களின் அடிப்படைத் தேவைகளில் கைவைப்பதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.
இந்த நீர் வழங்கல் திட்டத்துக்கு என்ன தடைகள் வந்தாலும், சம்பந்தப்பட்ட அமைச்சர் என்றவகையில் உங்களது வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பொறுப்பை நான் செய்துமுடிப்பேன். தடைப்பட்டுள்ள குறுக்கு வீதிகளுக்கு குழாய் பதிக்கும் பணிகள் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றார்.
ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்