எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காத உள்ளூராட்சி சபைகளில் வேறு அணிகளுடன் இணைய நேரிட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்டாயம், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடனேயே இணையும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தாமரை மொட்டு சின்னத்தின் கீழ் சுதந்திரக்கட்சியின் ஒரு அணியினரே போட்டியிடுவதாகவும் அப்படியான சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைய வேண்டிய தேவையில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டாலும் இரண்டு தரப்பினருக்கு கிடைக்கும் வாக்குகளை ஒன்றாக சேர்க்கும் போது 55 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் எனவும் இரண்டு தரப்பிலும் முற்போக்குவாதிகளே இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் இதனை கூறியுள்ளார்.தேர்தல் நடத்தப்படும் முறைக்கு அமைய உள்ளூராட்சி சபைகளில் சுமார் 90 வீத சபைகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது. அப்படியான நேரத்தில் வேறு கட்சியுடன் அல்லது சுயேட்சைக்குழுவுடன் இணைய வேண்டியேற்படும்.வரலாற்றில் முற்போக்கான முகாம்கள் பிளவுபடுத்த அனை சந்தர்ப்பங்களிலும் பிற்போக்கு முகாம்களுக்கு சாதகம் ஏற்பட்டது. இம்முறை அப்படி நடக்காது என எண்ணுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.