ஊடக அறிக்கை
இலங்கையின் பல்வேறு முக்கிய நீர் விநியோகத் திட்டங்களுக்கும் சுகநல பாதுகாப்பு, மற்றும் கழிவுநீர் முகாமைப்படுத்தல் முதலான திட்டங்களுக்கு ஜப்பான் உதவி வருவதோடு எமது பிரதமர் அண்மையில் ஜப்பானுக்கு மேற்கொண்ட விஜயத்தின் மூலம் ஜப்பானினால் வழங்கப்படும் உதவிகள் விரைவு படுத்தப்பட்டிருப்பதாகவும் இலங்கை ஜப்பான் நட்புறவு நீண்டகாலமாக இருந்து வருவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை தற்போது இலங்கை வருகை தந்துள்ள ஜப்பானின் காணி, அடிப்படை வசதிகள், போக்குவரத்து மற்றும் உல்லாசப்பயணத்துறை அமைச்சர் கெயிச்சிஇசீ தலைமையிலானா குழுவினர் அண்மையில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் இக்கலந்துரையாடலின் போது உத்தேச ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே மலக்கழிவு வடிகாலமைப்புத் திட்டம், கண்டி கழிவுநீர் முகாமைப்படுத்தல் திட்டம், களுகங்கை உவர்நீர் தடுப்பு மற்றும் நீர் வழங்கல் திட்டங்கள் தொடர்பாகவும் திருகோணமலை நகர மற்றும் துறைமுக அபிவிருத்தி தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதுவர் கெனிச் சகனுவா, நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் உயரதிகாரிகளான எஸ்.மங்களிக்கா, எஸ்.வீரசிங்க, மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைத் தலைவர் ஏ.அன்சார் ஆகியோர் கலந்து கொண்டனர்.