ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அர்ப்பணிப்புள்ள செயலாளர் இல்லாமல் செய்யப்பட்டமையும், தலைவரின் அரசியல் தீர்மானங்களுக்கு மாற்று அபிப்பிராயங்களைத் தெரிவித்து கட்சியை சமநிலைக்கு கொண்டுவரும் தலை வணங்கா ஆலோசகர்கள் அப்புறப்படுத்தப்பட்டமையுமே எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக் காலத்தில் கட்சி அனர்த்தத்துக்கு உள்ளானமைக்கான பிரதானமான காரணமாகும்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளர்கள் நியமிக்கப்படுள்ளமையும், நாடு முழுவதிலும் பல சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமையும், குறித்த காலத்துக்குள் மனுக்கள் கையளிக்கப்படாமையும், வழக்கொன்றின் மூலம் கட்சியின் சின்னம் களவாடப்படாத போதும் சுயேச்சையாகப் போட்டியிட வேண்டிய நிலையும் இத்தேர்தலில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலைமை, செயலாளர் நாயகம் என்ற அதிகாரமுள்ள பதவி, செயலாளர் என்ற அதிகாரமற்ற தலைவருக்கு அடிபணிந்து, கேள்வி ஏதும் கேட்காமல் தலைவரின் உள்நோக்கங்களுக்கு தலையசைக்கும்படியாக 2015 இல் கட்சியின் யாப்புத் திருத்தப்பட்டதால் விளைந்ததாகும்.
முன்பெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் தனது நலனுக்காக ஐக்கிய தேசியக் கட்சியைப் பாவித்திருக்கிறது.தற்போது ஐக்கிய தேசியக் கட்சி தனது நலனுக்காக முஸ்லிம் காங்கிசின் தனித்துவத்தைப் பலி எடுத்திருக்கிறது.
பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களுடைய மரணத்தின் முழுமையான பெறுபேற்றை பதினேழு வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி இந்த உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் பெற்றுக்கொண்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் உருவாகிய பின் பெற்றுக்கொண்ட அத்தனை வாக்குகளும் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி பெற்று வந்த வாக்குகளாகும். அந்த தேசியக் கட்சி தமது பழைய முஸ்லிம் வாக்கு வங்கியை மீண்டும் பெற்றுக்கொள்ள பகீரத முயற்சிகளை கடந்த காலங்களில் மேற்கொண்டு வந்து. ஆனால் அஷ்ரஃப் உயிரோடிருக்கும் வரை அது முடியவில்லை.
பின்னர், றவூப் ஹக்கீமைக் கொண்டு முஸ்லிம் காங்கிரசை மொத்தமாகக் கொள்வனவு செய்ய எடுத்த முயற்சிகளும் அப்போது கட்சியில் இருந்த கிழக்கு முஸ்லிம்களின் மீதும் தனித்துவ அரசியல் தாகத்திலும் அசைக்க முடியாத பற்றுக் கொண்டிருந்த கிழக்குத் தலைவர்களால் முறியடிக்கப்பட்டன.
தற்போது கிழக்கின் வணங்காமுடித் தலைவர்கள் எவரும் கட்சிக்குள் இன்மையால் ஐ.தே.கட்சியின் 28 வருட நோக்கம் ஹக்கீம் ஊடாக நிறைவேறியுள்ளது.
கட்சியின் வேட்புமனுக்கள் நிராகரிகரிக்கப்பட்டமையும், கையளிக்கத் தாமதம் ஏற்பட்டமையும் ஐ.தே. கட்சியின் வேண்டுதலுக்கமைய வேண்டுமென்றே ஆடப்பட்ட நாடகமா? என்ற சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
பஷீர் சேகு தாவூத்
முன்னாள் அமைச்சர்