தேயிலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை: தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர்

க.கிஷாந்தன்

தற்போது இலங்கையில் தேயிலை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை மையப்படுத்தி தேயிலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் எம்.எம்.ஜே.பி. கவரம்மன தெரிவித்தார்.

18.12.2017 அன்று தலவாக்கலையில் அமைந்துள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து தேயிலை பிரச்சினை குறித்து எமது ஊடகவியலாளர் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தேயிலையில் ஒரு வகை பூச்சி தாக்கம் இருப்பதாக ஊடகங்கள் ஊடாக பரவலாக அறிய முடிகின்றது. ஆனால் எம்மை பொருத்த வரையில் அவ்வாறான ஒரு பூச்சியின் தாக்கம் இருப்பதாக தெரியவில்லை. இந்த கெப்ரா என்ற பூச்சி இனம் இலங்கையிலும், தேயிலை மலைகளிலும் இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த பூச்சி இனம் தேயிலைகளில் இல்லையெனவும், தேயிலையை ரஷ்யாவிற்கு ஏற்றிச் சென்ற கொள்கலன்களிலே இந்த பூச்சி வகை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அவ்வாறு நடைபெற்றாத என்பது தொடர்பில் தெளிவாக கூற முடியாது.

எனினும் இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கை தேயிலைதுறைக்கு இது புதியதொரு பிரச்சினை தான் என்று சொல்ல வேண்டும். ஆகவே இந்த பிரச்சனை தொடர்பிலும், பூச்சி இனம் எவ்வாறு ஊடுருவியது என்பதையும் கண்டறிவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

ஆய்வுகளின் பின்னர் இதற்கு சரியான தீர்வை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அதுவரையில் தேயிலைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பில் உறுதியான கருத்துகளை கூற முடியாது.

எனினும் இதனால் இலங்கை தேயிலை துறைக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படபோவதில்லை என்பது மாத்திரம் தெரிவிக்க முடியும் என்றார்.