மஹிந்த பக்கமுள்ள எம்.பிக்களை தம்பக்கம் வளைத்துபோடுவதற்குரிய செயற்பாட்டில் தீவிரமாக இறங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச நிர்வாக கட்டமைப்பிலும் அதிரடி மாற்றத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்படி சட்டம் மற்றும் ஒழுங்கு, ஊடகத்துறை, நீதி ஆகிய அமைச்சுகளின் செயலாளர் பதவிகளில் விரைவில் மாற்றம் வரவுள்ளது. சட்டம், ஒழுங்கு அமைச்சின் செயலாளர், மீன்பிடித்துறை அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவராக இருந்த வீரகுமார திஸாநாயக்க எம்.பி. ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதற்காக கடந்த திங்கட்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார்.
அவருக்கு விரைவில் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி பிரதி அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது என அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.எனவே, வீரகுமார திஸாநாயக்கவின் கோரிக்கையின் பிரகாரமே சட்டம், ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பதவியில் மாற்றம் இடம்பெற்றுள்ளது என்று தெரியவருகின்றது.
மேற்படி பிரதியமைச்சுப் பதவியை ஏற்பதற்கு ஆரம்பத்தில் அவர் மறுப்புத் தெரிவித்திருந்தார். செயலாளர் பதவியில் மாற்றம் நிகழுமாயின் பதவியை ஏற்பதற்கு அவர் பச்சைக்கொடி காட்டியிருந்தார். தற்கமையவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நிதி அமைச்சின் தற்போதைய செயலாளராக இருப்பவர் சட்டம், ஒழுங்கு அமைச்சுக்கு மாற்றப்படலாம் எனத் தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்காக அரச நிர்வாக கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளமையானது ஐக்கிய தேசியக் கட்சியை அதிருப்தியடைய வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.