தேசிய பட்டியல் கோரிக்கை சம்பந்தமாக ரவூப் ஹக்கீமுடன் மிகத் தெளிவாகவும் விலாவாரியாகவும் பேசியுள்ளேன் : ஹரீஸ்

file image
அகமட் எஸ். முகைடீன்
   
அட்டாளைச்சேனை பிரதேசத்திற்குரிய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் திருப்திகரமான ஒரு முடிவினை மிக விரைவில் அறிவிப்பார் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். 
 
                                                                        file image
 
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம். றசீன் தலைமையில் நேற்று (8) வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண சுகாதார முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் நசீரின் அட்டாளைச்சேனை அலுவலகத்தில் நடைபெற்றது.
 
இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 
 
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் ஹரீஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அட்டாளைச்சேனை பிரதேசத்திற்குரிய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்பது இன்று பெருமளவில் விவாதிக்கப்படுகின்ற விடயமாக மாறியிருக்கின்றது. அட்டாளைச்சேனை மக்களுடைய இந்த கோரிக்கை சம்பந்தமாக நான் தெளிவாக இருக்கின்றேன். கட்சியினுடைய சில முக்கிய பிரமுகர்கள் இது தொடர்பில் மழுப்பலாக தெளிவில்லாமல் சில விடயங்களை கையாண்டதனால் மக்கள் குழப்ப நிலை அடைந்திருப்பது கவலை தருகின்றது.  
 
இவ்விடயத்தில் மிகத் திறந்த மனதுடன் செயற்பட்டு வெளிப்படையாக தலைவர் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பேச வேண்டும், இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. இது தொடர்பில் ஓரிரு தினங்களுக்கு முன்பு தலைவர் ரவூப் ஹக்கீமுடன் மிகத் தெளிவாகவும் விலாவாரியாகவும் நான் பேசியுள்ளேன். தலைவர் ரவூப் ஹக்கீம் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்குரிய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பாக ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருக்கின்றார், மிக விரைவில் திருப்திகரமான ஒரு முடிவினை அறிவிப்பார்.
 
இதன்போது இப்பிரதேச விளையாட்டுத் திறனை விருத்தி செய்யும்வகையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 15 விளையாட்டுக் கழகங்களுக்கு பிரதி அமைச்சர் ஹரீஸினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.