உறுப்பினர் கமலதாசன் எழுதிய கடிதம் தொடர்பில் கல்முனை மாநகரசபையில் சர்ச்சை!

 

3_Fotor_Collage_Fotorஎம்.வை.அமீர்

கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு 2015-05-27 ல் கல்முனை மாநகரசபையின் முதல்வர் சட்டமுதுமானி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது.

குறித்தசபை அமர்வின் போது பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பட்டன இதில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் வீ. கமலதாசன்,புத்தசாசன பொது நிருவாக மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் கருஜயசூரிய அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் தொடர்பில் முதல்வர் சபைக்கு அறிவித்தார்.

மாநகரசபை உறுப்பினர் வீ. கமலதாசன் அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆட்சியில் இருக்கின்ற கல்முனை மாநகரசபை தமிழர்கள் விடயத்தில் கருசனை செலுத்தாது தமிழர் பிரதேச அபிவிருத்தி மற்றும் நியமனங்கள் வழங்கும் விடயத்தில் தமிழர்களையும் தமிழர் பிரதேசங்களையும் புறம்தள்ளி செயற்படுவதாக எழுதியுள்ளதாக முதல்வர் நிஸாம் காரியப்பர் சபைக்கு எடுத்துக்கூறினார்.

இதன்போது கருத்து தெரிவித்த முதல்வர் நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கல்முனையைச் சூழவுள்ள ஏனைய சபைகள் முஸ்லிம்களுக்கு அநீதியிளைப்பதைபோன்று கல்முனை மாநகரசபை எந்த சந்தர்ப்பத்திலும் அநீதியிளைக்க வில்லை என்றும் ஆளும்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் பெற்றுள்ள அபிவிருத்தி மற்றும் சலுகைகளை விட அதிகமான அபிவிருத்தி மற்றும் சலுகைகளை தமிழ் உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களும் தமிழர்களுமே பெற்றுள்ளதாகவும் சிறுபான்மையினராக இருக்கும் தாங்கள் குறுகிய எண்ணங்களின் ஊடாக அரசியல் செய்ய விரும்பவில்லை எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

கல்முனை மாநகரசபை உறுப்பினர் வீ. கமலதாசனிடம் குறித்த கடிதம் தொடர்பில் முதல்வர் உள்ளிட்ட சபை உறுப்பினர்களால் விளக்கம் கோரப்பட்ட போதும் அவரால் சரியான முறையில் விளக்கமளிக்கமுடியவில்லை.

மற்றுமொரு தமிழர்கள் தரப்பு உறுப்பினரான எஸ்.ஜெயக்குமார் குறித்த கடிதம் தொடர்பில் விளக்கமளிக்க கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து எதிர்வரும் சபை அமர்வுவரை விடயம் ஒத்திவைக்கப்பட்டது.