தற்போதைய அரசாங்கம் வறிய மக்களின் இதயத் துடிப்பை புரிந்துகொண்டு செயற்படும் அரசாங்கமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வறிய மக்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் வகையிலேயே அரசாங்கம் அனைத்து பொருளாதார திட்டங்களையும் மேற்கொள்கிறது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக தெரிவித்தார்.
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினதும் சுகாதாரப் போசணை சுதேச மருத்துவ துறை அமைச்சினதும் வரவுசெலவு மீதான மூன்றாவது வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சுகாதார போசணை சுதேச மருத்துவத்துறை அமைச்சின் விவாதம் இடம்பெற்ற வேளையில் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
அமைச்சு அடைந்துள்ள முன்னேற்றங்களை பாராட்டிய ஜனாதிபதி, நாட்டு மக்களின் இலவச சுகாதார உரிமையை வெற்றிகொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் முக்கியமான பணிகளை நிறைவேற்றியுள்ளதெனக் குறிப்பிட்டார்.
இலவச சுகாதார சேவைக்காக சுதந்திரமாக செயற்படுவதற்கு இன்றைய சுகாதார அமைச்சருக்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அன்று ஓளடத சட்டத்தை நிறைவேற்றுகின்ற போதும் புகையிலை சட்டத்தை கொண்டு வருகின்றபோதும் சுகாதார அமைச்சர் என்ற வகையில் தான் முகம் கொடுத்த சவால்களையும் நினைவுகூர்ந்தார்.
சுகாதார அமைச்சருக்கு மட்டுமன்றி அனைத்து அமைச்சர்களுக்கும் இன்று தமது துறையில் சுதந்திரமாக செயற்படுவதற்கு ஜனாதிபதி என்ற வகையில் தமது ஆசீர்வாதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அன்று புற்று நோயாளிகளுக்கு வழங்கப்படக்கூடிய தொகையான 15 இலட்சம் ரூபாவுக்கு பதிலாக இன்று மட்டுப்படுத்தப்படாத வகையில் அந்த நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் வழங்குவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று பாரிய சமூக பிரச்சினையாக மாறியுள்ள சிறுநீரக நோயாளிகளுக்காக எதிர்வரும் 6 ஆம் திகதி அடிக்கல் நடப்படவுள்ள தேசிய சிறுநீரக வைத்தியசாலை தொடர்பாகவும் போதைப்பொருள் பிரச்சினையில் இருந்து சமூகத்தை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்தும் கருத்துத் தெரிவித்தார்.
சுதேச வைத்திய துறையின் எதிர்கால பயணத்திற்கு அரசாங்கம் பல்வேறு விசேட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றிகளையும் ஜனாதிபதி பாராட்டினார்.