இலங்கை அணியின் தலைவராக திஸர பெரேரா செயற்படுவார் ..?

இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் 20க்கு இருபது தொடர்களில் இலங்கை அணியின் தலைவராக திஸர பெரேரா செயற்படுவார் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் சமநிலையில் முடிய, நேற்று முன்தினம் நிறைவடைந்த 2-வது டெஸ்டில் இந்தியா அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் டிசம்பர் 2ம் திகதி ஆரம்பமாகிறது.

அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டி டிசம்பர் 10இலும், 2-வது போட்டி 13இலும், 3-வது போட்டி 16ம் திகதியும் நடக்கிறது.

இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், தற்போது இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டு வரும், உப்புல் தரங்கவிற்கு பதிலாக, இந்தியாவுக்கு எதிரான 20க்கு இருபது மற்றும் ஒருநாள் தொடரில் திஸர பெரேரா தலைவராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணித் தலைவர் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்து தொடர்ந்து விளையாடி வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன், அவருக்கு பதிலான ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.