சுஐப் எம்.காசிம்
சதொச நிறுவனத்தை தாம் பொறுப்பேற்க முன்னர் 2014 ஆம் ஆண்டு அரிசி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக, எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு, சதொச நிறுவனத்தின் தற்போதைய தலைவர் மற்றும் நிறுவன உயரதிகாரிகள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இந்த விசாரணைக்குத் தேவையான தரவுகளை உள்ளக கணக்காய்வு பிரிவு வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டத்தின், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் குழுநிலை விவாதத்தில் அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது,
பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் எம்.பி சதொச நிறுவனம் தொடர்பில் பிழையான எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைக்க முனைகின்றார். அப்பட்டமான பொய்களையும் இந்த உயர் சபையிலே கூறுகின்றார்.
நஷ்டத்தில் இயங்கும் சதொச நிறுவனத்தை நாம் பொறுப்பேற்றதன் பின்னர், அது இலாபத்தை ஈட்டிக்கொண்டிருக்கின்றது. ஒன்றரை பில்லியன் வரையிலிருந்த சதொச விற்பனைப் புரல்வை, நாம் மூன்று பில்லியனாக அதிகரித்துள்ளோம்.
சாதாரண மக்களுக்கு கை கொடுத்து உதவும் இந்த சதொச நிறுவனத்தின் நடவடிக்கைகளை நேர்மையாகவும், நியாயமாகவும் மேற்கொண்டு வருகின்றோம்.
இரண்டு வருடங்கள் இந்த நாட்டிலே மழையின்மையால் ஏற்பட்ட வறட்சி காரணமாகவே, அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்திக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், அவை வெளிப்படைத் தன்மையாகவே இருக்கின்றது என்றும் சார்ள்ஸ் எம்.பியின் குற்றச்சாட்டு அமைச்சர் ரிஷாட் பதிலளித்தார்.