மத்திய கொழும்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய சிங்கள, தமிழ் தேசியப் பாடசாலையொன்று நிர்மாணிக்கப்பட வேண்டுமென்று அமைச்சர் சம்பிக ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட லக்செத செவன வீடமைப்புத் தொகுதியை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். இதன்போது அமைச்சர் சம்பிக ரணவக மேற்கண்டவாறான வேண்டுகோள் ஒன்றை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் சம்பிக, மத்திய கொழும்பில் மில்லியன் கணக்கான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனினும் அவர்களுடைய குழந்தைகள் கல்வி கற்பதற்கான தரமான பாடசாலைகள் இப்பிரதேசத்தில் குறைவாக காணப்படுகின்றது.இதனை நிவர்த்தி செய்யும் வகையில் மத்திய கொழும்பில் சகல வசதிகளும் கொண்ட சிங்கள, தமிழ் தேசியப் பாடசாலையொன்று புதிதாக உருவாக்கப்பட வேண்டும்.இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னுரிமை அளித்துச் செயற்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.