நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்டு, கஅபாவினுள் நுழைந்து கதவை தாழிட்டுத் தொழுதுவிட்டு, பின்பு கதவைத் திறந்தார்கள். குறைஷிகள் பள்ளிக்கு வெளியில் கூடி நின்று நபி(ஸல்) என்ன செய்யப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
அத்தருணத்தில் நபி(ஸல்) ஓர் உரையை நிகழ்த்தினார்கள், “வழிப்பாட்டுக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு எவ்விதத் துணையுமில்லை. அவன் நமக்குத் தந்த வாக்கை நிறைவேற்றினான். தன் அடியாருக்கு உதவி செய்தான். அவனே ராணுவங்கள் அனைத்தையும் தனியாகத் தோற்கடித்தான்.
இதுவரை நடைமுறையில் இருந்து வந்த அல்லாஹ்வின் இந்த இல்லத்தைப் பராமரிப்பது, ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவது ஆகிய இவ்விரண்டைத் தவிர ஏனைய அனைத்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் எனது இவ்விரண்டு கால்களுக்குக் கீழ் புதைத்து விட்டேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். குறைஷிக் கூட்டமே! அறியாமைக் காலத்தில் நீங்கள் கடைப்பிடித்த மூடத்தனமான பழக்க வழக்கங்களையும் முன்னோர்களைக் கொண்டு பெருமையடித்து வந்ததையும் இப்பொழுது உங்களை விட்டு அல்லாஹ் போக்கி விட்டான் மக்கள் அனைவரும் ஆதமிடமிருந்து வந்தவர்கள் ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவர்”.
நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் தொடர்ச்சியாகத் திருக்குர்ஆனின் வசனத்தைக் குறைஷிகளுக்கு ஓதிக் காட்டினார்கள் “மனிதர்களே! உங்கள் அனைவரையும் நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிகக் கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்”. (குர்ஆன் 49:13)
உரையை முடித்த நபி(ஸல்) அவர்கள் குறைஹிகளை நோக்கி, “நான் உங்களுக்கு யூஸுஃப் நபி தனது சகோதரருக்குக் கூறியதைப் போன்றுதான் கூறுவேன். நீங்கள் எவ்விதத்திலும் பழிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் மன்னிக்கப்பட்டவர்கள். நீங்கள் செல்லலாம்” என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், உஸ்மானிடம் சாவியை ஒப்படைத்து, “இதை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். இது உங்களிடம் காலம் காலமாக இருக்கட்டும். உங்களிடமிருந்து இச்சாவியை ஓர் அநியாயக்காரனைத் தவிர வேறெவரும் பறிக்க இயலாது. உஸ்மானே! நிச்சயமாக அல்லாஹ் உங்களைத் தனது வீட்டிற்கு நம்பிக்கைக்குரிய பொறுப்பாளியாக நியமித்திருக்கின்றான். இந்தக் கஅபாவின் மூலம் நல்வழியில் உங்களுக்குக் கிடைக்கும் பொருட்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி 1:8:468, திருக்குர்ஆன் 49:13, அர்ரஹீக் அல்மக்தூம்